பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து குடியேறியவர்கள் என்ற பொருளில் இதனைப்போன்றே நெல்லை மாவட்டத்தில் இவர்கள் "கோட்டைப் பிள்ளைமார்" என்று அழைக்கப்படுகின்றனர்.2 "கள்ளர், மறவர், கனத்ததோர் அகம்படியார் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளரானாரே" என்ற வழக்கும் இதனை உறுதி செய்கின்றது. இராமநாதபுரம். சிவகங்கைச்சீமை மன்னர்களது சேவையில் இருந்து வந்த காரணங்களினால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர்கள் "சேர்வைக்காரர்" எனவும் குறிக்கப்படுகின்றனர்.

ஆனால், சோழர் காலத்தில் இந்த சமூகத்தினர் "அகமுடையார்" (தஞ்சை மாவட்டம்) "அகம்படியார்" (தஞ்சை, திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும்) "அகம்படி முதலி" (திருச்சிராப்பள்ளி, செங்கை, தென்னாற்காடு மாவட்டங்களிலும்) என வழங்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.3 இந்த சமூகத்தைச் சேர்ந்த மொக்கைப் பழனி சேர்வைக்காரரது வீரமக்கள்தான் மருது சகோதரர்கள். சிவகங்கைச் சீமை அரசியலில் சூன்யம் ஏற்பட்டு, குழப்பமும் கொடுங்கோன்மையும் நிலவிய பொழுது, மக்கள் தலைவர்களாக மாறி துணிச்சலுடனும், தீரத்துடனும் போராடி, சீமையின் மானத்தைக் காத்தவர்கள். அவர்கள். இருவரும் பேராற்றலும் போர்த்திறனும் மிகுந்தவர்களாக விளங்கினர். இராமநாதபுரம் சீமையின் தென்மேற்கே உள்ள முக்குளம் என்ற சிற்றூரில் பிறந்த இந்த சகோதரர்களும் அவரது தந்தையார் மொக்கைப் பழனி சேர்வைக்காரரும் இராமநாதபுரத்தில் குடியேறினர்.4 பழனி சேர்வைக்காரர் இராமநாதபுரம் மன்னரது அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் தம்மக்களும் போர்மறவர்களைப் போன்று படைப்பயிற்சி பெற எற்பாடு செய்தார். காரணம் இராமநாதபுரம் மன்னரது பிரதானியாக சிறந்து விளங்கிய, வயிரவன் சேர்வைக்காரர், வெள்ளையன் சேர்வைக்காரரைப் போன்று தம்மக்களும், அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக, அவையத்து முந்தி இருக்க வேண்டும் என ஆசைப்படடார்.


2 Edgar Thurston : Castes and Tribes of South India (1909) p. 101.

3 Rangacharya. K. Topographical Inscriptions in Madras Presidency (1919) vol IV p. 1743

4. எஸ்.எம். கமால் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக் 162