பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

காரர்கள் என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர்களில் மூத்தவர் வெள்ளை மருது. இவருக்கு நிர்வாகத்தைப் பற்றி எவ்வித சிந்தனையும் கிடையாது. வேட்டைப்பிரியர். தமது பெரும்பாலான பொழுதை வேட்டையாடுவதிலும், துப்பாக்கி சுடுவதிலும் கழித்து வருகிறார். காடுகளில் உள்ள வேங்கை, சிறுத்தை போன்ற மிருகங்களுடன் போராடுவதில் அவருக்கு பெருவிருப்பு இருந்தது. அசாதாரண மனிதனாக விளங்கிய அவர், தமது கை விரல்களுக் கிடையில் ஆற்காட்டு நவாப்பின் வெள்ளி ரூபாய் நாணயத்தை வைத்து வளைத்து ஒடித்து விடுவார். தஞ்சை, திருச்சி, மதுரையில் தங்கி இருந்த பரங்கியருடன் தொடர்பு கொண்டு அவர்களைப்போய் பார்த்து பழகிவந்தார். அவர்களும் இவரிடம் பெருமதிப்பு வைத்து இருந்தனர். அவர்களில் யாராவது காட்டில் வேட்டையாடுவதற்கு விரும்பினால் உடனே அவர்கள் வெள்ளை மருதுவிற்குத்தான் தகவல் அனுப்புவார்கள். அவரும் அதற்கான ஆயத்தங்களை செய்து, காட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்களுக்குத் தகுந்த தற்காப்பும் அளிப்பார். அவரைச் சுற்றிப்பல ஈட்டிக்காரர்கள் இருந்தாலும், புலி, சிறுத்தை போன்ற கொடிய மிருகம் வந்தால் அதனை முதலில் சந்தித்துப் பொருதி, விழ்த்துவது அவர்தான். ... ... ... ...

"அந்தப்பரந்த வளமான சீமையின் அரசராக இருந்தவர் சின்ன மருது. பெரும்பாலும் அவர் சிறுவயலில் வசித்து வந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது எண்ணத்தில், இதயத்தில், மாசு இல்லாதவராக இருந்தார். அழகாகவும், அன்புடனும் பழகும் பண்பாளராகவும் இருந்தார். அவரது தலையசைவைக் கட்டளையாகக் கொள்ளும் அந்த சீமை மக்கள் அவரை எளிதில் கண்டு பேசி தங்களது தேவைகளைத் தெரிவிக்கக் கூடிய வகையில் காவல் இல்லாத மாளிகை யொன்றில் வாழ்ந்து இருந்தார். நான் கி.பி 1795 பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரைப்போய்ச் சந்திக்கச் சென்ற பொழுது, அங்கு வந்திருந்த மக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியுற்றதை நோட்டமிட்டேன். அதன்பின்னர் நானும் அவரும் நண்பர்களானோம். நான் மதுரையில் இருக்கும் வரை அவர் எனக்கு அன்பளிப்புக்களாக உயர்ந்த ரக அரிசி, பழங்கள் ஆகிய வைகளை அனுப்புவதற்குத் தவறுவதில்லை. குறிப்பாக தடித்த தோலும் மிகவும் இனிப்பும் உள்ள பெரிய ஆரஞ்சுப்பழங்களை அனுப்பி வைப்பார். அந்த ரகப்பழங்களை இந்தியாவில் வேறு எந்தப்பகுதியிலும் நான் பார்த்ததே இல்லை.