பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

சின்னமருதுவும் பரங்கிகளைப் பெரிதும் மதித்துப் போற்றி வந்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் அவ்வப்பொழுது செய்து வந்தார். இவைகளுக்குகெல்லாம் மேலாக, சூழ்நிலைக்குத் தக்கவாறு வளைந்து பணிந்து நடக்கும் மனப்பாங்கும் அவரிடம் இருந்ததை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.

கி.பி. 1194ல் மறவர் சீமையில் ஏற்பட்ட வறட்சி நிலையைப் பயன்படுத்தி, தஞ்சை தரணியில் இருந்து ஏராளமான தானியங்களை அங்கு இறக்குமதி செய்து அபரிதமாக கொள்ளை லாபம் அடிக்க பரங்கிகள் துடித்தனர். அந்தக் கொள்கைக்கு உதவ, அவர்கள் மறவர் சீமையில் கொண்டு வந்து விற்கும் தானியங்களுக்கு சுங்கவரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரினர்.17 சுயநலம் மிகுந்த பரங்கிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முற்றும் மறுத்து விட்டார்.18 ஆனால் சிவகங்கைப் பிரதானிகள் தயக்கம் எதுவும் இல்லாமல் சிவகங்கை சீமையில் பரங்கிகளுக்கு உடனடியாக இந்த சலுகையை வழங்கினர்.19 தொடர்ந்து இராமநாதபுரம் மன்னருக்கும் சிவகங்கை பிரதானிகளுக்கும் எழுந்துள்ள பிரச்சனைகளையும் புகார்களையும் விசாரிக்க இருதரப் பினரையும் கும்பெனிக்கலெக்டர் பவுனி என்பவர் முத்துராமலிங்க பட்டணத்தில் ஆஜர் ஆகுமாறு "சம்மன்” கட்டளை அனுப்பினர். அதனை எற்று கலெக்டரைச் சந்திப்பது இராமநாதபுரம் சீமை மன்னரது மரபுகளுக்கு பொருத்தமானது அல்ல எனக் கருதி "சம்மனை” இராமநாதபுரம் மன்னர் உதாசீனம் செய்தபொழுது மருது சேர்வைக்காரர்கள் அதனைப் பெற்றுக் கொண்டதுடன் கலெக்டர் கட்டளைப்படி அவரை தொண்டி சென்று பேட்டி கண்டனர்.


17 Military Consultations, vol. 182, (7-1-1794), р. 79

18 Military Consultations, vol. 184, (25-3-1794), pp. 1236-70

19 Military Consultations, vol 183 (1,9-1794),

  • முத்துராமலிங்கபட்டினம் - இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குக்கடற்கரைப் பகுதியில் தொண்டிக்கு வடக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ள சிற்றூர்

20 Military Consultations; vol. 189, (A), 13-9-1794), pp.3920-28