பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளினால் பரங்கியரது பகைமையை வளர்த்துக் கொண்ட இராமநாதபுரம் மன்னரது, இராமநாதபுரம் கோட்டையை எதிர்பாராத நிலையில் கும்பெனிப் படைகள் திடீரென சூழ்ந்தது. 8-2-1795ம் தேதி காலையில் இராமநாதபுரம் மன்னரைக் கைது செய்து திருச்சிக்கோட்டைச் சிறையில் இட்டு, மறவர் சீமையைத் தங்கள் நிர்வாகத்தில் வைத்துக் கொண்டதை எதிர்த்து, கி.பி. 1797 மேமாதக் கடைசியில் முதுகுளத்தூர் பகுதி மக்கள் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்த பொழுது கும்பெனியாரது ஆயுதப்படைகளினால் சமாளிக்க முடியாத நிலைதோன்றியது. ஏறத்தாழ இரண்டு மாதம் நீடித்த அந்தக் கிளர்ச்சியில் குறிப்பாக அபிராமம் அருகே கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த இறுதிப்போரில் நூற்றுக்கணக்கான மறவர்கள் நாட்டுப்பற்றும், ராஜ விசுவாசமும் மிகுந்தவர்களாக போராடி மடிவதற்கு, எட்டையாபுரம் வீரர்களைவிட, சின்ன மருது சேர்வைக்காரரது சிவகங்கைப் படைதான் காரணமாக இகுந்தது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளித்து மறவர் சீமையில் கும்பெனியாரது கொடி தொடர்ந்து பறப்பதற்கு துணை நின்ற சிவகங்கை சேர்வைக்காரர்களது உதவியை பாராட்டி கும்பெனியார் பரிசுகள் வழங்கினர். இதற்கென சின்னமருது சேர்வைக்காரரது மகனை கும்பெனி கவர்னர் செனனைக்கு வரவழைத்து பேட்டி அளித்து பெருமைப்படுத்தினார்.[1]

அன்றைய அரசியல் சூழ்நிலையில் சிவகங்கைப் பிரதானிகள் ஏனைய பாளையக்காரர்களைப் போன்று கும்பெனியாரது ஆதரவாளர்களாக விசுவாசத்துடன் நடந்து வந்ததை அவர்களது கடிதங்களில் இருந்து தெரிய வருகிறது. இராமநாதபுரம் முத்து ராமலிங்க சேதுபதி மன்னரைப்பற்றிய முறையீடு ஒன்றில், அவர்கள் எப்பொழுதும் கும்பெனிக் கலெக்டரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியக் காத்து இருப்பதாகவும், கும்பெனியாருக்காகவே வாழ்ந்து வருவதாகவும், அதனால் மயிரிழையில் கூட வேறுபட்டு நடக்க மாட்டோம் என அவர்கள் உறுதியளித்து எழுதியுள்ளனர்.[2]


  1. 21 Revenue Consultations - vol. 95 (7-6-1799), pp. 957-1054
  2. 22 Madurai District Records-vol. 1133 (4.2.1801), pp. 171-172