பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

கண்கள் திறந்தன

கலிங்க நாட்டில் தொடுத்த கடுமையான போரின் வெறுக்கத்தக்க விளைவுகள் அசோகப் பேரரசரது சிந்தனையிலும் செயலிலும் மாற்றத்தைப் புகுத்தின. அவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதனைப்போன்று சிவகங்கைச் சீமைப் பிரதானிகளது அரசியல் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இராமநாதபுரம் சீமையின் கமுதிப்போர். கி.பி.1799 மே மாத இறுதியில் கும்பெனிக் கலெக்டர் லூவிங்டனது வேண்டுகோளுக்கு இணங்கி, சிவகங்கையிலிருந்து மறப்படையொன்று கமுதிக் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றது.1 இந்தப் படையை சின்னமருது சேர்வைக்காரரது மகன் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இராமநாதபுரம் சீமையின் சேதுபதி மன்னரைச் சிறையிலடைந்த கும்பெனியாரது கொடுமையை எதிர்த்துப் போரிட்ட கிளர்ச்சிக்காரர்கள், வெள்ளக்குளம் காட்டில் நடைபெற்ற போரில் படுதோல்வியடைந்ததற்கும் கும்பெனியாரது செல்வாக்கு தொடருவதற்கும் மருது சேர்வைக்காரர்களது இந்த ராணுவ உதவி துணையாக இருந்தது.

அப்பொழுது, மருது சகோதரர்கள் கும்பெனியாரை ஆதிக்க வெறிகொண்ட அந்நியராகக் கொள்ளவில்லை மாறாக அவர்களை அன்னியோன்னியம் கொண்ட அருமை நண்பர்களாகக் கருதினர். அதுவரை அவர்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி நட்புடன் திகழ்ந்த கர்னல் வெல்ஷ் போன்று அனைத்து வெள்ளைப் பரங்கிகளும் இருப்பார்கள் என அவர்கள் தவறான மதிப்பீடு செய்து இருந்தனர். ஆதலால் கலெக்டர் லூவிங்டன், உதவி கோரியவுடன், உடனே தமதுபடைகளை கமுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன் விளைவு என்ன என்பதை விவேகத்துடன் சிந்திக்க


Revenue Consultation : vol. 229, 30-5-1799, p. 4849.