பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அவரைப்பேட்டி காண குற்றாலம் சென்றதையும் அவரது பேட்டி கிடைக்காததால் அங்கிருந்து அவரைத் தொடர்ந்து சொக்கம் பட்டி, சிவகிரி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், பாவலி ஆகிய ஊர்களுக்குச் சென்றும், வேண்டுமென்றே அவருக்கு பேட்டி மறுத்து, நாற்பது நாட்கள் அலைக்கழிவு செய்த பின்னர் இராமநாதபுரம் இராமலிங்கம் விலாசம் அரண்மனையில் கலெக்டரைச் சந்தித்த பொழுது தமக்கு இருக்கைகூட அளிக்காமல் குற்றவாளியைப்போல மூன்று மணி நேரம் நிற்கவைத்து விசாரித்து அவ மரியாதை செய்ததையும், சிறிது ஓய்விற்குப் பின்னர் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பிய அவரையும் அவரது பிரதானி சுப்பிரமணிய பிள்ளையையும் தடுத்து நிறுத்துமாறு உத்திரவிட்டதையும் விவரமாக எடுத்துச் சொன்னார். அவரும் அவரது குழுவினரும் இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பி வந்ததையும், அவரது குழுவினரும் கோட்டையில் இருந்து தப்பி வந்ததையும், அவரது குதிரைகளையும்7 பொன், வெள்ளி ஆபரணங்களையும் கலெக்டர் ஜாக்ஸன் அபகரித்துக் கொண்டதுடன், அவரது பிரதானி சிவசுப்பிரமணியப்பிள்ளையை இராமநாதபுரம் கோட்டைக்குள் சிறை வைத்துள்ள கொடுமைகளை, கட்டபொம்மு நாயக்கர் தெரிவித்தார்.8 மேலும் புதிதாகப் பணியேற்றுள்ள கலெக்டர் பேஷ்குஷ் தொகையை வசூலிப்பதில் மட்டும் கண்ணுங்கருத்துமாக இருப்பதையும், தமது பாளையத்தில் வறட்சியினால் குடிகள் படுகின்ற சிரமங்களைச் சிறிதும் உணராதவராக இருப்பதையும் தெரிவித்தார்.

கட்டபொம்மு நாயக்கரது கண்ணீர்க்கதையைக் கவனமுடன் கேட்ட சின்ன மருது சேர்வைக்காரரது சிந்தனை குழம்பியது: மனம் நெகிழ்ந்தது; நைந்தது. சிற்றரசரைப்போன்ற பாஞ்சைப் பாளையக்காரரை, வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இங்கு வந்த கும்பெனியார், இங்கிதம் இல்லாமல் இழிவாக நடத்தியிருப்பது, தமக்கே ஏற்பட்ட துயரமும் தலைக்குனிவும் போல உணர்ச்சிவசப்பட்டு துடித்தார். பரங்கித் துரைகளைப்பற்றி அதுவரை அவர் கொண்டு இருந்த நல்ல எண்ணம். நேச மனப்பான்மை ஆகியவை அனைத்தும் ஒரு நொடி நேரத்தில் பறந்து


7 Revenue Consultations vol. 88 B-27-9-1793, pp. 3103-31.10

8 vol 88 B 25-9-1798, pp. 3101 - 118.