பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

வகையிலும் பொதுமக்கள் - குறிப்பாக விவசாயிகள் வீணான துன்பத்திற்கு ஆளாயினர். அறுவடையில், விவசாயிகளிடமிருந்து அரசுத் தீர்வையாகப் பெறுகிற நெல், மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிகுதியாகச் சேர்ந்துவிட்டால், இந்த கூடுதலான அளவு நெல்லை, அந்தக் கிராமத்து குடிமக்களிடம் பிரித்துக் கொடுத்து, அதற்குரிய கிரையத் தொகையைக் கட்டாயமாக வசூலித்துப் பெறும் முறை ஒன்றும் நடைமுறையில் இருந்தது. இதற்கு "குடியம்" (Guddiyam) எனப் பெயர்.26இதன்மூலம் மிகுதியான தானியத்தை சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பு கும்பெனியாரால் தவிர்க்கப்பட்டது. இவ்வளவு இன்னல்களையும் குடிமக்களுக்கு ஏற்படுத்திவிட்டு, அவர்களது குறைகளைக் களைவதற்கான ஆலோசனை பெற தனி குழுவொன்றையும் கி.பி. 1796ல் கும்பெனியார் நியமனம் செய்தனர். அதன் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதாகச் சொல்லி மக்களது ஆதரவைத் தேட முயன்றனர். இதனால் மக்களது மனநிலையிலும், நிர்வாக இயக்கத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு மாறாக அண்மையில் உள்ள இராமநாதபுரம் சீமையில் கி. பி. 1797ல் எழுந்த பரங்கியர் எதிர்ப்புக் கிளர்ச்சிகள், மதுரைச் சீமை மக்களது மன நிலை மாற்றத்திற்கு, தெம்பு ஊட்டி, தீனிபோடுவதாக அமைந்தது.27

இராமநாதபுரம் சீமையின் கதையே வேறாக அமைந்து இருந்தது; கும்பெனியார் ஊழலின் ஒருமித்த உருவமாக வடக்கே விளங்கிய வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற பரங்கிப் பெருமான், இந்தியாவில் உள்ள ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் தனிப் பெருந்தலைவர். தெற்கே அவரது திருவுருவாக நடமாடியவர் இராமநாதபுரம் சீமை கலெக்டர் காலின்ஸ் ஜாக்லன் துரை. இந்த துரை மகனாரின் முழு நம்பிக்கைக்குரிய அந்தரங்கப் பணியாளர் துபாஷ் ரங்கப்பிள்ளை. துபாஷ் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வல்லவர் என்ற பொருள் தரும் பாரசீகச் சொல். இந்தியாவில் வாணிபத்திற்காக வந்த இந்தப்பரங்கிகள் கர்நாடக அரசியல் சூழ்நிலையில் நவாப் வாலாஜா முகம்மது அலியினை ஆதரித்து போர் உதவி புரிந்ததற்கு வெகுமதியாகவும், கி.பி. 1792ல்


26 Madurai District Records vol. 1103 p. 19.

27 Francis W: Gezetteer of Madurai (1914) p. 181.