பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நவாப்புடன் செய்து கொண்ட கர்நாடக உடன்பாடு காரணமாகவும் தெற்குச் சீமைகளில் வரி வசூலையும் பாளையக்காரர்களது கோட்டைகளது பராமரிப்பையும் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு இந்த "துபாஷ்"கள் தேவைப்பட்டனர். அந்தந்தப் பகுதி மக்களுடன் அவர்களது மொழியில் பேசி தொடர்பு கொள்ளுவதற்கும், கடிதப் போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கும் ஆங்கிலமும், பாரசீகமும் பயின்ற இந்த துபாஷ்கள் இடைத்தரகர்களாக விளங்கினர்.ஆதலால் 18வது நூற்றாண்டில் இவர்களுக்கு கிராக்கி இருந்ததுடன், பரங்கிகளுடன் அவர்களது தொடர்பு காரணமாக அவர்களுக்கு மக்களிடம் மிகுந்த செல்வாக்கும் இருந்தது. ஏராளமான வருவாயும் அவர்களுக்குக் கிடைத்தது. அதன் காரணமாக அவர்கள் பல அறச் செயல்களையும் மேற்கொண்டு வந்தனர். புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளை, பூண்டி, பச்சையப்ப முதலியார், அபிராமம் அப்துல்காதிர் ராவுத்தர் ஆகிய "துபாஷ்கள்" மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கத் தக்கப் பொதுப்பணிகளை நிறைவேற்றி வைத்தனர். ஆனால் இராமநாதபுரம் கலெக்டரின் துபாஷான ரங்கப்பிள்ளையின் முறையே வேறு. தொண்டை மண்டல கருணிகர் குலத்தைச் சேர்ந்த அவருக்கும், காலின்ஸ் ஜாக்ஸன், சென்னைக் கோட்டையில் கும்பெனிச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் இருந்து நெருக்கமான தொடர்புகள் இருந்தன. இந்தக் காரணத்தினால் ஜாக்ஸன் இராமநாதபுரத்திற்கு பதவி மாற்றம் பெற்று வரும் பொழுது துபாஷ் ரங்கபிள்ளையையும் கையோடு அழைத்து வந்தார். ரங்கபிள்ளையும் அவரது உதவிக்காக வேறு இரு உறவினர்களையும் உடன் அழைத்து வந்தார்.

இந்த நால்வரும், இராமநாதபுரம் சீமையில் புதிய அரசியல் வரலாறு படைத்தன. அவர்களது நடவடிக்கைகள் அவர்களது பணிக்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்தியதுடன் நியாயத்திற்கும் நேர்மைக்கும் நிலைக்களனாக விளங்குவதாகப் பறைசாற்றி வந்த பரங்கிகளது முகமூடிக்குப் பின்னால் அமைந்துள்ள அவர்களது கோர வடிவையும் கோடிட்டுக் காட்டின.

அலுவலகப்பணியில் மட்டும் அல்லாமல் கலெக்டர் காலின்ஸ் ஜாக்ஸனுக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் பொரு-