பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வசூலிக்க இயலாமல் தவித்த கும்பெனி கலெக்டர்களும் அவர்களது முகவர்களான குத்தகைதாரர்களும் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக, அவர்களது எடுபிடிகளான கணக்குப்பிள்ளைகளும், வில்லைச் சேவகர்களும் மக்களை அல்லல்படுத்துவதையே தங்களது அன்றாடப் பணியாகக் கொண்டு இருந்தனர். இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னரும், கும்பெனியார் நிர்ணயித்த கிஸ்திப் பணம் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. இடையிலே பல ஊழல்கள். குடிமக்களும், பாளையக்காரர்களும் இந்த கோர நாடகத்தில் பாதிக்கப்பட்டவர்களாக காட்சியளித்ததைத் தளபதி புல்லர்ட்டனின் அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டுகிறது.

இவைகளை அறிந்த கும்பெனி தலைமை, கலெக்டர்களை மாற்றினர். ஓரளவு குடிமக்களுக்கு இனந்தெரிந்தவர்களைத் தங்களது குத்தகைதாரர்களாக நியமனம் செய்தனர். இவைகளினால் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலவில்லை. இத்தகைய குழம்பிய நிலையைப் பொதுவாகக் கள்ளர்களும், குறிப்பாக சில பாளையக்காரர்களும் தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்தினர். "இனாம்" "சுவந்திரம்" ஆகியவை சம்பந்தப்பட்ட வசூல் தொகை கணக்கிற்குக் கொண்டு வரப்படாமல் கையாடல் செய்யப்பட்டது. கும்பெனியாரது பணியாளர்களான அமில்தார்களும், கணக்கப்பிள்ளைகளும், ஒன்று சேர்ந்து கொண்டு பொய்க்கணக்கு தயாரித்துப் பெரும்பாலான நிலத்தை வரிவிதிப்பில் இருந்து விலக்கு செய்து அவைகளின் வருமானத்தைக் கையாடல் செய்தனர்.[1]

பழனி பாளையக்காரர், தமது பாதுகாப்புக்கென ஆயிரம் பேர் கொண்ட படையணி ஒன்றைத் துவக்கினார். தேவதானப்பட்டி பாளையக்காரர் கும்பெனியாருக்குக் கிஸ்தி செலுத்துவதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திட மறுத்தார். விருபாட்சி பாளையக்காரர் கலெக்டர் வழங்கிய சன்னதைப் பெற்றுக் கொள்ளவில்லை. போடி பாளையக்காரரது பணியாட்கள், அந்தப் பாளையத்தில் கலெக்டரது முகாமில் இருந்த வில்லைச் சேவர்களைச் சுட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வடகரை பாளையக்காரரும் உடந்தையாக


  1. 40 Ibid p. 186