பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

எங்களது கப்பத்தொகையை முறையாக கலெக்டரது உத்தரவின்படி செலுத்தி வருகிறோம். ஆனால் இதற்கு மாற்றமாக கலெக்டர் எங்களது பாளையத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தநோக்கத்தை நிறைவேற்ற அவர் எங்களைப் பற்றி தவறான அறிக்கைகள் அனுப்பி வருகிறார். நாங்கள் அவ்விதம் தவறாக நடந்து இருந்தால் திருச்சியில் உள்ள துரையிடத்தில் அல்லது தஞ்சாவூர் கலெக்டரிடத்தில் நிரூபிக்கட்டும். அவர்கள் சரியான புலன் விசாரணையின் மூலம் எங்களைக் குற்றவாளியாக முடிவு செய்தால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறோம். மேலும் இந்தக் கலெக்டர், பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்து பாளையங்களைப் பறிமுதல் செய்வதில்தான் நாட்டமாக உள்ளார். அவர் இங்கு இருக்கும் வரை சந்தேகத்திற்கு இடமில்லாமல் எங்களது பாளைதையும் மேற்கொள்ள முனைவர். அதற்காக ராணுவம் எங்களை நோக்கி அனுப்பப்பட்டால் நாங்கள் எங்களது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். [1]

— கோட்டைப்பட்டினம் தாலுகா ஓரூர் அமில்தார் 18.3.1801
தேதிய கடிதம்

இந்த அறிக்கைகள் அனைத்தும் சின்னமருது சேர்வைக்காரர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருக்கு பக்கத்துணையாக தங்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்திற்கு உதவி வருகிறார் என்பதையும், ஏற்கெனவே தேடப்பட்டு வரும் மயிலப்பன் தலைமையில் இராமநாதபுரம் சீமை முழுவதும் மோதல்களை நிகழ்த்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. என்பதையும் கும்பெனியாருக்கு உணர்த்தினர். அத்துடன் சிவகங்கைச் சீமையிலும் போருக்கான ஆயத்தங்கள் துவக்கப்பட்டு இருப்பதையும் உறுதியான தகவல்கள் மூலம் கும்பெனியார் புரிந்து கொண்டனர்.


  1. Papers Relating Selections (1944). Polegar wars (Tinnevely District)