பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4
மீண்டும் மயிலப்பன்

றவர் சீமையின் ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென் மேற்கே இருப்பது சித்திரங்குடி கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது ராணுவப் பணியில் இருந்த தால் இவர் “மயிலப்பன் சேர்வைக்காரர்” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ம் ஆண்டின் துவக்கத்தில் கும்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சிக்கோட்டையில் அடைத்தனர். இந்தக் கொடுமையைக் களைந்தெறிய மயிலப்பன் இரவு பகலாகப் பாடுபட்டார். திருச்சிக் கோட்டையில் இருந்த மன்னரை, காவலர்களுக்கு கடுக்காய் கொடுத்து விட்டு தப்புவிப்பதற்குக் கூட முயன்றார். திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார்.[1]

கும்பெனியாரின் கவனமும் படையணிகளின் நடமாட்டமும் நான்காவது மைசூர் போரில் ஈடுபட்டிருந்த பொழுது. முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கி நடத்தினார். கும்பெனியாரது கச்சேரிகளையும், களஞ்சியங்களையும் தீயிட்டும் அவர்களது கூலிப்படைகளுடன் பொருதியும், அவர்களிடமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியும், நாற்பத்து ஒரு நாட்கள், கும்பெனி நிர்வாகத்தைத் திக்கு முக்காடச் செய்தார். இறுதியில் துரோகிகளது துணையுடன் மக்களது கிளர்ச்சி நசுக்கப்பட்டதால் மனமுடைந்து தஞ்சை சீமை சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். ஆறு மாதங்களுக்-


  1. Madurai District Records vol. 1139, p. 185.