பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

குப்பின்னர் நெட்டுருக்குத் திரும்பி வந்தார். நிலைமைகளை நோட்டமிட்டார். தகவல் அறிந்த சிவகங்கை சேர்வைக்காரர்கள் அவரை இராமநாதபுரம் சீமைக்குச் செல்ல வேண்டாம் என்றும் நெட்டூரிலேயே தங்கி இருக்குமாறும் செய்தி அனுப்பினர். சிவகங்கைப் பிரதானிகளது செய்தி மயிலப்பனுக்கு வியப்பை அளித்தது. அடுத்த இரண்டொரு நாட்களில் அவரிடம் சாப்பாட்டிற்காக பத்துக்கலம் நெல்லை சிவகங்கை அரசுப்பணியாளர்கள் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை அடுத்து, சூடியூருக்கு முகாம் வந்திருந்த பெரிய மருது சேர்வைக்காரர் மயிலப்பனை அங்கு சந்தித்தார்.[1] கடந்தவைகளை மறந்து சிவகங்கைச் சீமையில் தொடர்ந்து தங்கி இருந்து சிவகங்கை அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அரசியல் நிலைமைகளை நன்கு புரிந்து கொண்ட மயிலப்பனும் மனமாற்றம் பெற்றுள்ள மருது சேர்வைக்காரரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட்டார்.

மறவர் சீமையின் மக்கள் கிளர்ச்சி, இறுதி தோல்வியுறுவதற்குக் காரணமான சிவகங்கை சேர்வைக்காரரது மாறுபட்ட மனநிலை மயிலப்பனுக்கு மகிழ்ச்சி அளித்தது. சேதுபதி மன்னரை சிறையிலே தள்ளி சேதுநாட்டை அபகரித்துள்ள வெள்ளைப் பரங்கியரைப் அழித்து, மறவர் சீமையின் மானத்தைக் காப்பதற்கு தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்து இருப்பதாக நம்பினார். ஓய்ந்து இருந்த அவரது உடல் நரம்புகள் முறுக்கேறின. அவரது நடையிலும் உடையிலும் ராணுவ மிடுக்கு மீண்டும் பிரதிபலித்தது. சிவகங்கையிலிருந்து பாஞ்சாலக்குறிச்சி கோட்டைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சரக்குகள் அணிக்கு பாதுகாப்பாக உடன் சென்றார். இந்த அணியில் குளத்தூர் நாகராச மணியக்காரரும், வெள்ளமருது சேர்வைக்காரரது மகன் சிவத்த தம்பியும் அன்னாரது மருமகன் ஆளஞ்சாத் தேவரும் இருபது துப்பாக்கி வீரர்களும், நூற்று எண்பத்து ஐந்து ஈட்டிக்காரர்களும் இருந்தனர். பதினாயிரம் துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு சேர்ப்பதற்கான இருபத்து ஐந்து பொதி வண்டிகளுக்கு பாதுகாப்பாக இந்த அணியினர் சென்றனர். பாஞ்சையை அடைந்த இவர்களைப் பாராட்டி சிவத்தையா நாயக்கர்


  1. Ibid. 18-4-1802. p. 46