பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


மறவர்களுக்கு எதிர்பாராத திகைப்பும் ஏமாற்றமும் காத்து இருந்தன. திடீரென வடதிசையில் இருந்து பரங்கியர் உதவிக்கு இராமநாதபுரம் கோட்டை அணியினர் வந்து சேர்ந்தனர். போரின் இறுதி நிலையில் மாற்றம். கிளர்ச்சிக்காரர்கள் மிகவும் களைத்துப் போயிருந்தாலும் மீண்டும் கும்பெனியாரின் உதவிப்படைகளுடன் அவர்கள் மோதினர். ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. புதிய அணியினரின் சுறுசுறுப்பான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கோட்டைக்கு வடகிழக்கே உள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிக்கு பின்னடைந்து பரமக்குடி சென்றனர்.[1] ஆனால் லெப்டிமில்லர் அவர்களைத் தொடர்ந்து துரத்தி வந்தான். காட்டுப் பரமக்குடி கிராமத்து அருகே கும்பெனிப்படையணியை கிளர்ச்சிக்காரர்கள் வீராவேசமாகப் பொருதி அவர்களது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினர்.[2] இதற்கிடையில், சிவகங்கையில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் உதவிக்கு மறவர் அணி ஒன்று வந்து சேர்ந்ததால், மில்லரது கூலிப்படையை மயிலப்பன் அழித்து வாகை சூடினார். மில்லர் உயிர்தப்பி இராமநாதபுரம் கோட்டைக்கு ஒட்டம் பிடிக்க வேண்டியதாயிற்று. அப்படி ஒடும் பொழுதுகூட, சித்திரங்குடியில் கைது செய்து கொண்டு வந்த தளபதி மயிலப்பன் மனைவியையும் சகோதரியையும் விடாப்பிடியாக மில்லர் இராம நாதபுரம் கோட்டைக்குக் கொண்டு சென்று சேர்த்தான். தகவல் அறிந்த தளபதி மயிலப்பன் சேர்வைக்காரர் எஞ்சி நின்ற கும்பெனி அணியை துவம்சம் செய்ததுடன் காட்டுப் பரமக்குடியிலும், தெளி சாத்தநல்லூரிலும் கும்பெனியாருக்கு சொந்தமாக இருந்த தானியக் களஞ்சியங்களைச் சூறையாடி அழித்தார்.[3]

மயிலப்பனது குதிரைப்பிரிவு வீரர்கள், பரமக்குடிக்கு வட கிழக்கே பத்துக்கல் தொலைவில் உள்ள சாலைக் கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இராமநாதபுரம் சிவகங்கை சீமைகளின் எல்லையில் உள்ள இந்த கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அங்கு வைகையாற்றில் பலகால்களில் வரும் வெள்ளத்தைத்தேக்கி விவசாயம் செய்வதால் இந்தப்பகுதி வளமை பெற்று இருந்தது. ஆதலால், கும்பெனி நிர்வாகத்தின் அங்கமான கச்சேரி ஒன்று


  1. Board of Revenue Proceedings, vol. 278. p. 3318
  2. 18 Tinnevely District Records, vol. 3579 (24-3-1801) p. 81
  3. Madurai District Records, vol. 1133 (12-3-1801) p. 188