பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

" ... ... ... ... கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களுக்கு நீர் ஆதரவு அளித்து வருவது பற்றிய அறிக்கைகள் எனக்கு நாள் தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. உமது செல்வாக்கைச் சிதைப்பதற்காக உமது எதிரிகள் ஏற்பாடு செய்துள்ளவை இவை என நான் கருதியது உண்டு. ஆனால் இப்பொழுது, முறையாக லெப்டி மில்லர் மூலமாக, சிவகங்கைச் சீமையில் மயிலப்பன் புகலிடம் பெற்று இருப்பதை அறிகிறேன். நம்மீது கொண்டு உள்ள விசுவாசத்தை நீர் பகிரங்கமாக மீறும் இந்தக்குற்றத்தின் கொடுமையை எவ்விதம் சகித்துக் கொள்வது என்பதை என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை.

"ஏற்கனவே துரைத்தனத்தாரின் மிகுதியான வெறுப்பைப் பெற்றுள்ள மயிலப்பனையும் அவனது கூட்டாளிகளையும் உடனே கைப்பற்றி ஒப்படைக்குமாறு கோரி இருந்தேன். இதுவரை உம்மிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆதலால், இப்பொழுது மீண்டும் அதே கோரிக்கையை நினைவுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். மேலும், இந்தக் கட்டளையை மதிக்காவிட்டால், அல்லது அதனை நிறைவேற்றாது - அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த இயலாவிட்டால் கும்பெனியாரது பாதுகாப்பு உமக்கு எப்பொழுதும் இருக்காது என்பதை நேர்மையான முறையில் எச்சரிக்கை செய்கிறேன்.

"உண்மையில், உம்மிடம் பணிவுடைமை இருந்தால் உமக்குப் பாதுகாப்பான வழி யொன்றையும் கூற விருப்புகிறேன். கொடுமைகள், சூழ்ச்சிகளால் உம்மை வழி நடத்துபவர்களது பலவீனமான ஆலோசனைப்படி நடப்பதைவிட்டு நீங்கிக் கொள்ளவும். அவை உம்மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.முன்பு கட்டனூரில் நாம் சந்தித்த பொழுது உமக்கு ஆதரவும் பாதுகாப்பும் தருவதாக உறுதி சொன்னேன். நீர் கும்பெனியாருக்கு கீழ்ப்படிந்து கடமைகளை நிறைவேற்றும் வரை, அந்த உறுதிமொழிக்கு மதிப்பு உண்டு. அதற்குத்தக்க தருணம் இப்பொழுது வாய்த்துள்ளது. இப்பொழுது உமக்குத் தேவையானது கும்பெனி துரைத்தனத் தாரின் சலுகையா அல்லது சீற்றமா? இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளவும். ......."

இதனை அரண்மனை அட்டவணை படித்து முடிக்கக் கேட்டதும் சின்னமருது சேர்வைக்காரருக்கு சிரிப்புத்தான் வந்தது .