பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கேவலம்! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாததால் செல்வம் கொழிக்கும் இந்திய நாட்டில் மிகுதியாகவும் விலை குறைவாகவும் உள்ள தேவையான பொருட்களை வாங்கிச்சென்று பிழைக்க வந்தவர்கள் இந்த மிலேச்சர்கள். அவர்களது எழுத்தில் எவ்வளவு ஆணவமும் அழுத்தமும் பொதிந்து இருக்கின்றன! பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டு வந்த பேரரசர்களைப்போல் அல்லவா இவர்கள் பாவனை செய்கிறார்கள்! வளைந்து செல்லும் வணிகர்களுக்கு அதிகாரம் செய்யும் வலிமை வந்துவிட்டது! இருந்தாலும் தமக்கே உரிய ராஜதந்திரப் பணிவுடன் சின்னமருது கலெக்டருக்கு பதில் ஒன்றை அனுப்பி வைத்தார்.[1] கும்பெனியாருக்குத் தொடர்ந்து விசுவாசத்துடன் இருப்பவர் போலவும் மயிலப்பனுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாதது போலவும், கும்பெனியாரது அதிருப்தியை உண்டு பண்ணக்கூடிய அபாயத்தைத் தோற்றுவிக்கப் போவதில்லை என்னும் பாணியில் அவரது பதில் கடித வாசகம் அமையப் பெற்று இருந்தது அந்தக்கடிதம்.

".. --- 23.3.1801 தேதிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதன் அடக்கத்தைப் புரிந்து கொண்டேன். அதில் கடந்த சில காலமாக கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாகவும், ஆயுதபாணிகளான வீரர்களைத் திரட்டி வருவதாகவும், இரண்டாவது முறையாக கிளர்ச்சிக்காரர் மயிலப்பனுக்கு ஆதரவு அளித்து இருப்பதாகவும், அவரைப் பிடித்துக் கொடுத்து கும்பெனியாருக்குக் கட்டுப்பட்டவனாக நடந்து கொள்ளுமாறும் குறிப்பிடபட்டுள்ளது. கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்கு நாங்கள் அடைக்கலம் அளிப்பதா? எங்களது கனவிலும் நினைக்காத ஒன்று. இவ்விதம் நிகழ்ந்து இருந்தால், அதற்குரிய குற்றவாளி நாங்களாக இருந்தால், அது எங்களுடைய பொல்லாத காலம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

"மயிலப்பன் எங்களது சீமைக்குள் வந்தால். சந்தேகத்துக்கு இடமில்லால், தாமதிக்காமல் உடனே அவனைப் பிடித்து அனுப்பி விடுவோம். மதுரை, திண்டுக்கல் சீமையைச் சேர்ந்தவர்கள், மதுரைக்குத் திரும்பும் வழியில் எங்களது சீமையில் உள்ள


  1. 27 Madurai District Records, vol.1133.(30-3-1801) pp.200-203