பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

எமனேசுவரம் கன்னியப்பிள்ளை மடத்தில் ஒரு இரவு தங்குவார்கள். திருடர்கள் அவர்களை மடக்கி திருடிச் சென்று விடுவார்கள். காயமடைந்தவர்களுக்குக் கட்டுப்போட்டும். கையில் பணமும் கொடுத்து தக்க பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பி வைக்கின்றோம். மற்றும் எங்களது சீமை எல்லையில் உள்ள பரமக்குடி முதலான ஊர்களில் இருந்து பதறி ஓடி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறோம்.

"ஏற்கனவே மயிலப்பனைப் பிடித்துக்கொடுக்குமாறு, வந்த கடிதத்தைப் பார்த்தவுடன், எங்களது ஆட்களை நாலாபுறமும் அனுப்பிப் பிடித்து வருமாறு செய்தோம். ஆனால் எவ்வளவேர தேடிப்பார்த்தும், முயற்சி செய்தும் அவன் எங்கும் அகப்படவில்லை. முன்பு சிங்கன் செட்டியுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்ட காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவனைப் பிடித்து வருமாறு எங்களது கோட்டை சேர்வைக்காரரையும், பாம்பூர் நாயக்கரையும் அனுப்பி வைத்தேன். மயிலப்டன் ஒரு முரடன். அவனால் எங்களுக்கு என்ன உதவி செய்ய இயலும்? பயனற்ற ஒருவனுக்காக ஆதரவு அளித்து வீணாக கும்பெனியாரதும் உங்களதுமான வெறுப்பை அல்லவா சம்பாதித்துக் கொள்ள நேரிடும்? நாங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் விசுவாசத்துடன் இருந்து உங்களது சலுகைகளைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். அதனால், நாங்களும் எங்களது குடும்பத்தினரும் முன்னேற்றம் எய்த முடியும்.

"தாங்களும் எங்களுக்கு கட்டனூரில் கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் நினைவில் இருத்தி வைத்து கும்பெனி யாருக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறோம். நாங்கள் இவ்விதம் உள்ளச்சத்துடனும் நேர்மையுடனும் நடந்து வரும்பொழுது எங்களைப்பற்றி இத்தகைய புகார்கள் எங்களது எதிரிகளால், எங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படுவது எங்களது பொல்லாத காலந்தான். முறையான விசாரணையின் மூலம் எங்களது நேர்மையைப் புரிந்து, எங்களைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறோம்.

"இரண்டு கடிதங்கள் மதுரை வழியாக கிடைத்தன. அவைகளுக்கு உடனே பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. திருச்சுழி வழியாக வரப்பெற்ற கடிதத்திற்கும் பதில் அனுப்பப்பட்டு விட்டது.