பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எங்களது பேஷ்குஷ் தொகையை இராமநாதபுரம் பேஷ்காரிடம் செலுத்திவிட முதலில் கட்டளை இடப்பட்டது. அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு எழுதினேன். தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு கட்டளையிடப்படவில்லை என அவர் பதில் கொடுத்தார்.

"இதனை உங்களுக்கும் தெரிவித்து இருக்கிறேன். இங்குள்ள குழப்பமான சூழ்நிலை காரணமாக பொதி வண்டிக்காரர்கள் இங்கு வருவது இல்லை. தானியங்களுக்கும் தவசங்களுக்கும் கிராக்கி இல்லை. பக்கோடா பணம் கிடைப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது. இப்பொழுது கட்டளையிட்டுள்ளபடி இராமநாதபுரத்தில் கிஸ்தியைச் செலுத்தி விடுகிறோம். நாங்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து வருகிறோம். கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். கும்பெனியார் குற்றம் காணும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம். ....”

மருது சேர்வைக்காரரது இந்தக் கடித வாசகம் கும்பெனி யாருக்கு. அவர்கள் முன்னர் கட்டுப்பட்டு இருந்த விசுவாசிகள் போன்று அமைந்து இருந்ததே யொழிய அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கும்பெனியாருக்கு எதிராக இருந்தன என்பதை கும்பெனியாரது ஒற்றர்களது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டம் ஒரூரில் இருந்து கும்பெனியாருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையொன்றில் வெள்ளைமருது சேர்வைக்காரரது மைத்துனர் பொன்னளிக் கோட்டை உடையார் சேர்வைக்காரர், சுந்தரபாண்டிய பட்டினத்தில் மூன்று நாட்களாக தங்கி இருப்பதாகவும், கும்பெனியாருக்கு ஆதரவாக உள்ள பெருவாக்கோட்டை சேர்வைக்காரரை ஓலம் கலுங்கு என்ற இடத்தில் சந்தித்துப்பேசுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரிவித்தது.[1] சிவகங்கை வட்டார மங்கலத்தில் இருந்து வரப்பெற்ற கடிதத்தில்[2] ”சின்னமருது சேர்வைக்காரார், மேலூர் நாட்டு கள்ளர் தலைவர்கள் பதினோரு பேர்களை வரவழைத்து சிறப்புக்கள் செய்தார். பல்லக்கும், குதிரையும், பட்டாடைகளும், மானியங்களும், அவர்களுக்கு வழங்கி, அவருக்கு உதவி பெறுவதற்கான உறுதிமொழி

  1. Madurai District Records, Vol. 1 133, (29-3-1801) p. 49.
  2. Madurai District Records Vol. p. 198.