பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

சீமை முழுவதும் கிளர்ச்சியை முடக்கிவிட்டு கும்பெனியாரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும்; இதனால் எதிரியின் வலுவனைத்தையும் அங்கேயே வீணாக்கிவிட்டால் சிவகங்கைச் சீமைப் போரில் அவர்களை எளிதில் மடக்கிவிடலாம் என்பது மருதுசேர்வைக்காரர்கள் திட்டம். இராமநாதபுரம் சீமையின் வடகிழக்கே பாண்டுகுடியில், மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது தலைமையில் அமைக்கப்பட்ட இராமநாதபுரம் சீமைக்கான தற்காலிக அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைந்து இருந்தது.[1] அவரது இளைய சகோதரர் கனக சபாபதித் தேவர் முதுகுளத்துார் பகுதியில் தீவிரமாக இயங்கி வந்தார். அத்துடன், இராமநாதபுரம் சீமையில் இருந்து நூறு பொதி வண்டியில் ஆயுதங்களும் இருபது பொதி வண்டிகளில் வெடிமருந்தும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பப்பட்டன. [2]ஏற்கனவே சிவகங்கைச் சீமை வீரர்களும் அங்கு போய்ச்சேர்ந்து இருந்தனர். மொத்தத்தில் இரண்டு மறவர் சீமைகளில் இருந்து முப்பது ஆயிரம் மறவர்கள் திரண்டு இருந்தனர்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில், இராமநாதபுரம் - சிவகங்கைச் சீமைகளின் பத்திரத்திற்கு புறக்காவல் நிலையமாக அந்தக்கோட்டை விளங்கியது. அதனால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கும், உறுதிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் செய்து வந்தனர். மறவர் சீமை வீரர்களின் பணியும் அந்தக்கோட்டைப் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏறத்தாழ இருநூறு கல் தொலைவு இடைவெளி சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இருந்தாலும், அரசியலில் இரு பாளையங்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து நின்றன.


  1. 34 Tinnevely District Records, vol. 3579, (18-3-1801) p.77.
  2. 35 Ibid. p. 69-72.