பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

ரின் துணை வேண்டும். நெல்கட்டும் செவ்வல் பூலித்தேவர், நவாப்பையும் அவரது கூலிப்படையான கும்பெனியாரையும் பொருதுவதற்கு மைசூர் மன்னர் ஐதர்அலியின் பேராதரவு அவருக்கு இருந்தது. மதுரையை முற்றுகையிட்ட நவாப்பின் படைகளை முறியடிக்க கம்மந்தான் கான்சாகிபுவிற்கு பிரஞ்சு ராணுவம் கை கொடுத்து உதவியது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தாக்குதலை தொடுப்பதற்கு கட்டபொம்மு நாயக்கருக்கு டச்சுக்காரர்களது ஆயுதங்களும் பணமும் உதவின. ஆனால், சிவகங்கை சேர்வைக்காரர்கள், கும்பெனியாருடன் மோதுவதற்கு வெளியில் இருந்து உதவி பெறும் வாய்ப்பு இல்லை. எனினும், சிவகங்கைச் சீமை மக்களது மகத்தான துணிச்சலிலும், திறமையிலும் நம்பிக்கை கொண்டவர்களாக பரங்கிகளுடன் பொருதினர். முழுமூச்சுடன் போராடினர்.

அதுவரை, நேருக்கு நேர் நின்று போரிடும் இயல்பான முறையுடன், கட்டுப்பாடும் ராணுவப்பயிற்சியும் மிக்க எதிரியை, மறைந்து இருந்து தாக்கும் கொரில்லாப் போரினையும் மேற்கொண்டனர். பலபோர்களில் நூற்றுக்கணக்கான மறவர் மடிந்தனர். பிறந்த மண்ணைக் காப்பதற்காகப் போராடினோம் என்ற மன நிறைவுடன், வெள்ளைப் பரங்கியரின் வெடிமருந்துச் சாதனங்கள் - அவைகளைத் திறமையாகப் பயன்படுத்தும் பயிற்சிமறவர் சீமை மக்களது வீரத்தை வெற்றி, கொண்டன. அவர்களது சூழ்ச்சியும் துரோகமும் போராளிகளது எதிர்ப்பு அணியைப் பிளந்து, எளிதில் வெற்றி கொள்ள உதவின. என்றாலும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக, மகத்தான நாட்டுப்பணியாக இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளில் ஆறுமாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த மருது சகோதரர்களும் அவர்களது வழியினரும், உற்றமும் சுற்றமும் - அனைத்து ஆண்மக்களும் - விடுதலைப்போரின் வெகுமதியாக தாக்குமரங்களில் தொங்கவிடப்பட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றி சிந்தித்து செயல்பட்டவர்களுக்கு, வெஞ்சினத்துடனும் வீர சாகசங்களுடன் போரிட்ட நல்லவர்களுக்கு, ஏகாதிபத்தியத்தின் அன்றைய வாரிசான ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியார் வழங்கிய அரிய பரிசு-துக்குத்தண்டனை.