பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ளார்.[1]இத்தகைய கோட்டைப் போரினைத் திறம்பட இயக்கிய புதுமை மனிதர் ஊமைக் குமாரசுவாமியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, கர்னல் வெல்வின் கருத்துத்தான் இங்கு பொருத்தமாக உள்ளது. “ஊமையை மக்கள் பெரிதும் பாராட்டி மதித்தனர். அவரது சிறு அசைவு கூட அற்புதமாகக் கருதப்பட்டது. அவரது ஆணையை நிறைவேற்ற அனைவரும் ஒடோடி வந்தனர். அவர் இல்லாமல் எந்த ஆலோசனையும் இல்லை. அவர் தலைமை இல்லாத போராட்டமும் கிடையாது”.[2]

போரில் இறந்துவிட்ட பாஞ்சைத் தலைவர்களை இனங்கண்டு கொள்வதற்காக மடிந்து கிடக்கும் பாஞ்சை மறவர்களது பினக்குவியல்களைச் சுற்றிப்பார்த்து வந்தனர் எட்டையாபுரத்து துரோகிகள். அதே சமயம் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த தாய் ஒருத்தி, போரில் கலந்து கொண்ட தனது ஒரே மகனின் சடலத்தை போர்க்களத்தின் இன்னொரு பக்கத்தில் தேடிக் கொண்டு இருந்தாள். குற்றுயிராகக் கிடந்த அந்த வீரனை இனங்கண்டு அவள் அழுது தவித்தாள். அப்பொழுது அந்த வீரன் தனது தாய்க்கு ஆறுதல் சொல்லியதுடன் தனக்கு அண்மையிலேயே தன்னைப் போல மரண காயங்களுடன் தவித்துக் கொண்டிருக்கும் “ஊமைச் சாமி”யைக் காப்பாற்றச் சொல்லிவிட்டு இறந்துவிட்டான். தனது மகனைப் பிரிந்த துக்கச் சுமையுடன் அவனது இறுதி ஆசையை நிறைவேற்ற ஊமைத்துரையைத் தூக்கி தனது தோளிலே சுமந்து தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றாள், அந்த வீரத்தாய். வழியில் அவளைத் தடுத்து விசாரித்த பரங்கிப்படையினரிடம் தனது மகன் அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் சுமந்து செல்வதாக தந்திரமாகச் சொன்னவுடன் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.[3] அடுத்த மூன்று நாட்களும் ஊமைத்துரை காயங்களுக்கு மருந்திட்டு உதவி செய்தாள். அவரும் ஒரளவு உடல் தேறியவராக மேலும் அங்கிருப்பது ஆபத்து என உணர்ந்து எஞ்சிய தோழர் சிலருடன் இராமநாதபுரம் சீமைக்குப் புறப்பட்டார்.[4] கமுதி கோட்டைக்குப் போய்ச் சேர்ந்த பொழுது, அங்கு நடை


  1. 8 குருகுகதாஸப்பிள்ளை - திருநெல்வேலி சீமை சரித்திரம் (1931) பக். 289
  2. 9 Ibid vol. I p.p. 131-33.
  3. 10 Military Reminiscences 1930 vol. I, p. 132-33
  4. 11 Military Consultations, vol. 284, (9-6-1801) p. 4280