பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்தது.[1] ஆதலால் அவர் கிழக்கே கமுதிக்கு வராமல் திருச்சுழி வழியாக வடக்குத் திசையில் திருப்பூவணம் சென்றார். ஆனால் கமுதி கோட்டையில் உள்ள பரங்கிகள் உதவிக்கு இராம நாதபுரத்தில் இருந்து படையணிகள் வந்து சேர்ந்தன. கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதலில் மாற்றம் ஏற்பட்டது. கோட்டையில் ஏற்கனவே உள்ள பரங்கியர் தாக்குதலுக்கும் இப்பொழுது புதிதாக வந்துள்ள புதிய அணிகளுக்கும் இடையில் அகப்பட்ட கிளர்ச்சிக் காரர்கள் வேறுவழி இல்லாமல் தாக்குதலை நிறுத்தி வடகிழக்கில் பின்னடைந்தனர்.

அவர்கள் அபிராமம் சென்றனர். பரங்கியரது கச்சேரியும் கிட்டங்கிகளும் அந்த ஊரில் இருந்தன. நெசவாளர்களும், விவசாயிகளும் நிறைந்த அந்த ஊர் குடிமக்கள் கிளர்ச்சிக்கு ஆரம்ப முதலே தகுந்த ஆதரவு அளிக்கத் தயங்கி வந்தனர். கோபமுற்ற கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரது சொத்துக்களுக்கு நெருப்பு வைத்து அழித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்கோடா பன மதிப்புள்ள கைத்தறித்துணிகளும், தானியங்களும் அழிந்ததுடன் குடிகளது சில வீடுகளும் அந்தப் பேரழிவிற்குத் தப்பவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அதே ஊருக்கு வந்து அழிமானத்தை பார்வையிட்ட இராமநாதபுரம் கலெக்டர் லூஷிங்டன், சென்னையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அனுப்பிய அறிக்கையில், இன்று காலையில் பயங்கரமான அழிமானத்தில் சிக்கியுள்ள அபிராமத்தைப் பார்வையிட்டேன். முன்னூற்று ஐம்பது வீடுகள் அழிந்து மொட்டையாக நின்று கொண்டு இருக்கின்றன. இரண்டு குழந்தைகளும், கால்நடைகளும், விவசாய வித்துக்களும், நூல் சிப்பங்களும் நெருப்பில் வெந்து போய்விட்டன. எஞ்சியுள்ள இருப்புத் தானியங்களையும் கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளை கொண்டு போய்விட்டனர். இத்தகைய கொடுமைகளை அவர்கள் நேற்று முன்தினம் காமன்கோட்டையிலும், இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள இன்னொரு கிராமத்திலும் மேற்கொண்டுள்ளனர்.” எனக்குறிப்பிட்டு இருந்தார்.[2]


  1. 20 Madurai District Records, vol. 1 133, 26-6-1801. pp. 22-24
  2. 21 Tinnevery District Records, vol. 3579, 23-6-1801, pp.14-20