பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

 அவர்களது வீரமிக்க போராட்டமும். தன்னலமற்ற தியாகமும், இந்திய தேசிய வரலாற்றில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில், சிறப்பு மிக்க புனித ஏடுகளாக இருந்து வருகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னால் மறவர் சீமையின் முன்னோடியாக விடுதலை வேள்வியில் களபலியாகிய இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி (கி. பி. 1762-95) மன்னரை மறந்தது போல, சிவகங்கைச் சேர்வைக்காரர்களது இணையற்ற போராற்றலையும் தியாகத்தையும் இந்திய தேசிய இயக்க வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பையும், தமிழகமக்களும், வரலாற்று ஆசிரியர்களும், அரசினரும் இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மறந்து விட்டனர். இங்கிய தேசிய இயக்கம், கி. பி. 1857-ல் தான் “சிப்பாய் கழகத்தின்” வாயிலாக துவங்கியதாகக் கணிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் உண்மையான வரலாற்றையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டுப்பாடும் பொறுப்பும் வரலாற்று ஆசிரியர்களுக்கு இருப்பதால் நமது நாட்டு விடுதலைப் போராட்டங்களின் சரியான வடிவத்தை, ஆதாய பூர்வமான சித்தியத்தை வரைவதற்கு முலைந்துள்ளேன்.

தமிழகத்தின் சுயேச்சைத்தன்மை, சிந்தனைகள் - இவைகளின் அடிப்படையில் எழுந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவைகளை அழிக்க முனைந்த கும்பெனியார் என்ற ஏகாதிபத்திய வெறியர்களை அழிக்க 1792-95ல் முனைந்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர். அவருடைய நிறைவு பெறாத சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து மறவர் அணிகளை ஆங்காங்கு திரட்டி, வெள்ளைப்பரங்கிகளையும் அவர்களது கூலிப்படைகளையும் வீழ்த்தி அழிப்பதற்கு கி.பி. 1801ல் விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் சிவகங்கை சேர்வைக்காரர்கள். அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், பிறந்த பொன்னாட்டின் பெருமையைக் காக்கப்போராடிய பாங்கும் தியாக உணர்வும், வேறுநாட்டுப் போராட்ட எடுகளிலும் காண இயலாத தாக உள்ளன. “மா ஆயிரம் பட மடிந்த களப்போர் உரைப்போ ருக்கு நாவு ஆயிரமும் நாள் ஆயிரமும் வேண்டும்” என்ற ஜயங்கொண்டாவது பாடல்தான், அவர்களது விடுதலைப் போராட்டத்தைப் புலப்படுத்தப் பொருத்தமாக உள்ளது.

என்றாலும், இதுவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் பற்றி புனையப்பட்டுள்ள நாடோடி இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று