பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

சீமையை அடுத்துள்ள மதுரைச்சீமையிலும் உள்ள மக்களைக் கும்பெனியாருக்கு எதிராகத் துாண்டிவிட்டனர். குறிப்பாக, மேலுரை அடுத்துள்ள நத்தம் பாளையம் முழுவதும் கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. நத்தம்,மேலுர், திருமோகூர் ஆகிய ஊர்களில் அமைந்து இருந்த கும்பெனியாரது ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றியதையும் ஏற்கெனவே பார்த்தோம். இந்த மோதல்களில் பலர் உயிர் இழந்தனர். குறிப்பாக, நத்தம் மணியக்காரராக, சின்னமருது சேர்வைக்காரரால் நியமனம் செய்யப்பட்ட வெங்கடாசலம் என்பவர் நத்தம் தாசில்தாரைக் கொன்றார்.[1] இந்த அலுவலர் 6-5-1801 விருபாட்சி கிளர்ச்சிக்காரர் கோபாலநாயக்கரைப் பிடித்து கும்பெனியாரிடம் ஒப்படைத்தவர்.[2] இதற்கு கைக்கூலியாக கும்பெனியார், தாசில்தாரது துரோகப்பணியைப் பாராட்டி, அவருக்குப் பிடித்தமான சிறந்த குதிரை ஒன்றை வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

சின்னமருது சேர்வைக்காரது மகன் தலைமையில் ஒரு அணி இராமநாதபுரம் கோட்டையை நோக்கிச் சென்றது. மற்றொரு அணி, ஊமைக்குமாரசுவாமி தலைமையில் மதுரைக்கு விரைந்தது. இந்தக்கால கட்ட அரசியல் நிலைமை பற்றி புதுக்கோட்டை தொண்டமான் வரைந்த கடிதத்தில் "எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சியின் ஜயவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பதாக” வர்ணித்து இருந்தார்.[3] நாலாபுறமும் காட்டுத்தி போல பரந்து நின்ற மக்களது அன்னிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வை, ஆயுதம் கொண்டு எல்லாப் பகுதிகளிலும், எதிர்த்து சமாளித்து வெல்லுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை கர்னல் அக்கினியூ உணர்ந்தான்.

கிளர்ச்சிக்காரர்களது அரக்கத்தனமான கொடிய எதிர்ப்பை பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடியாக சந்தித்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஆதலால், இந்தப்பிரச்சினையை பல கோணங்களில் இருந்தும் ஆய்வு செய்து முடிவுகாண முயன்றான்.கிளர்ச்சிக்காரர்களுடன் போரில் ஈடுபடும் மக்களது மனநிலை,


  1. 26 Ibid (24-5-1801).
  2. 27 Military Consultations-vol. 285(A) (27-5-1801), pp. 5047-48
  3. 28 Military Consultations, vol. 284, (9-6-1801) pp. 4280-81