பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாரர்களது சூழ்ச்சியினால் தான் அவர் சிவகங்கைச் சீயையை விட்டு உயிர் தப்புவதற்காகத் தொண்டமானின் அறந்தாங்கிச் சீமைக்கு ஓடினார்[1] . ஆதலால், பழைய பாரம்பரிய முறைகளைத் தொடர்ந்து சிவகங்கை மன்னராக படைமாத்துார் ஒய்யாத்தேவரைப் பிரகடனம் செய்தால் சம்பிரதாயம், பழமை, ஜாதி ஆகியவைகளில் பிடிப்புள்ள நாட்டுத்தலைவர்களும், மக்களும் கிளர்ச்சிச் காரர்களது அணியில் இருந்து கணிசமான அளவு பிரிந்து வந்து புதிய அரசின் ஆதரவாளர்களாக மாறுவதற்கும், மருது சகோதரர்களது செல்வாக்கைப் பலவீனப் படுத்தி பரங்கி எதிர்ப்பு அணியை உடைப்பதற்குப் பயன்படும் என்பதும் அக்கினியூவின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அவரது எதிர்பார்ப்பு உண்மை என்பதைப் பிந்தைய நிகழ்ச்சிகள் நிரூபித்தன.

கர்னல் அக்கினியூவின் கடிதங்கள், பரங்கிகளை எதிர்த்து சிவகங்கை சேர்வைக்காரர்களது நிலை, அவர்களது தலைமையில் அணி திரண்ட நாட்டுப்பற்று மிக்க மக்களது இயக்கம், மறவர் சீமையின் அரசியல்நிலை ஆகியவைகளைத் தெளிவாக சித்திரிப் பவையாக இருந்தன. இந்நிலையில், தலைமறைவாக இருந்த படைமாத்துார் ஒய்யாத்தேவர் கும்பெனி கவர்னருக்ரு ஒரு விண்ணப்பம் ஒன்றையும் அனுப்பி வைத்தார்.[2] அதில், மறைந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகனாதத்தேவர், அவரது வாரிசாக அவரை நியமனம் செய்து, அவரது மகள் வெள்ளச்சியையும் அவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார் என்றும் மருது சேர்வைக்காரர்கள் சிவகங்கைச்சீமையைக் கைப்பற்றிய பின்னரும் தமக்கு மரியாதை செலுத்திவந்து பின்னர் அவர்களுக் கிடையில் எழுந்த கருத்துவேற்றுமை காரணமாக அவரையும் அவரது நண்பர்களையும் திடீரென சிறையில் அடைத்து வைத்து பல அக்கிரமங்களைச் செய்து வந்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வந்து கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அறந்தாங்கிச் சீமையில் வாழ்ந்து வருவதாகவும், அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தார். தஞ்சாவூரில் கும்பெனியாரின் ரெஸிடெண்டாக இருந்த கேப்டன் பிளாக்பர்ன் ஒய்யாத்தேவரைத் சந்தித்து இந்த விண்ணப்பத்தைப் பெற்று சென்னை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.


  1. 35 Ibid 28-6-1801, pp. 5039–40
  2. 36 Ibid 28-6-1801, pp 5038:44