பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

 இதில் கூறப்பட்டிருந்த மருதுசேர்வைக்காரர்கள் பற்றிய புகார்கள் அனைத்தும் கும்பெனியாருடைய கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டவைதான். இராமநாதபுரம் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி மன்னர்கூட சிவகங்கை அரசபீடத்திற்கு ஒய்யாத் தேவருக்கு உள்ள தகுதி பற்றி கவர்னருக்கு ஒருமுறை அறிக்கை அனுப்பிவைத்தார்.[1] ஆனால் அப்பொழுது சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் கும்பெனியரது மதிப்பிற்குரிய நண்பர்களாக இருந்ததால், அதனைப்பற்றி எவ்வித அக்கரையும் காட்டவில்லை. ஆனால் இப்பொழுது சிவகங்கைச்சீமை அரசியல் சூதாட்டத்திற்குத் தேவையான பகடைக் காயாக ஒய்யாத்தேவரைப் பயன்படுத்த முடிவு செய்தனர், இறந்து போன சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவருக்கோ அல்லது அவரது மனைவியான மறைந்துபோன வேலுநாச்சியாருக்கோ, படைமாத்துர் தேவர் நேரடியான வாரிசு அல்ல. அத்துடன் வேலுநாச்சியாரது ஒரே மகளான வெள்ளச்சியை மணந்து அதன்மூலம் சிவகங்கை அரசக் கட்டிலுக்கு உரியவரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் அப்பொழுது உயிரோடுதான் இருந்தார். அவரையே ஆர்க்காட்டு நவாப்பும் கும்பெனியாரும் சிவகங்கை அரசரது வாரிசாக ஏற்கனவே அங்கீகரித்து இருந்தனர். [2]இதுவரையிலும் அவர் அதிகாரபூர்வமான சிவகங்கை அரசராகத்தான் இருந்து வந்தார்.

ஆனால் சிவகங்கைச் சீமையை, தங்களது உடமையாக மாற்றுவதற்குத் திட்டமிட்ட கும்பெனியார், தங்களுடைய திடீர் பகைவர்களான மருது சேர்வைக்காரர்களையும் அவர்கள் அமைத்துள்ள ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியையும். விடுதலை இயக்கத்தையும், அழித்து ஒழிக்க முடிவு செய்தனர். அதற்கு முதல்நடவடிக்கையாக சிவகங்கை சீமையில் தங்களது கைக் கூலியொருவரை மன்னரது வாரிசு என்றும் சிவகங்கையின் அதிகாரபூர்வமான “ஜமீன்தார்” என்றும் அறிவிப்பு செய்வதற்கு ஏற்ற தகுதி உள்ளவராக படைமாத்தூர் தேவர் அகப்பட்டார். ஆதலால் அவரை சிவகங்கைச் சீமைக்கு அரசர் அல்ல ஜமீன்தார் என கும்பெனி கவர்னர் நியமனம் செய்து உத்தரவு பிறப்-


  1. 37 Military Consultations, vol. 285 (A) (28-6-1801), pp. 5043-44
  2. 38 Ibid vol. 155, (24-1-1792) p. 474