பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சென்று கொண்டு இருக்கின்றனர். இளவரசியை மணம் செய்து கொண்டதன் மூலம் சிவகங்கை அரசராகிய வேங்கன் பெரிய உடையாத்தேவரும் தம்முடைய நலன்களை இவர்களுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

“இவர்களை அடக்கி, ஒடுக்கி, கும்பெனியாரது ஆதிக் கத்தை நிலைநாட்ட சகல அதிகாரங்களையும் பெற்றவராக கர்னல் அக்கினியூ நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவ கங்கைச்சீமையில் உள்ள குடிமக்கள் எவரும் பிரிட்டிஷ் அரசின் மானத்தையும் மதிப்பையும் குறைக்கும் வகையில், ஆயுதம் தாங்கினால், அவர்கள் மரண தண்டனை பெறுவார்கள் என எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். சிவகங்கைச் சீமை மக்கள் அனைவரும், இந்த மருது சகோதரர்களை விடுத்து, தங்களது முறையான ஜமீன்தாருக்கு விசுவாசங்கொண்டவர்களாக, தங்கள் தொழில் முறைகளைக் கவனித்து வர வேண்டியது. அதற்கு பிரிட்டிஷ் அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கும்,”என்ற வாசகங்கள் அதில் கண்டிருந்தது. அப்பொழுது அவர்களது ஆதிக்க வெறியையும் நட்பைப் பிரித்து பகையாக்கும் நரித்தந்திரத்தையும் ஆயுதவலிமையையும் எதிர்த்துப் போராடக்கூடிய வேறு தலைவர்கள் கர்நாடக்கத்தில் யாரும் இல்லாததால் பரங்கிகள் தங்களது ஆயுத வலிமை அனைத்தையும் சிவகங்கைச்சீமை மீது திணிப்பது எளிதாகிவிட்டது.

அதே சமயத்தில் பொதுமக்களுடைய தகவலுக்காக சிவகங்கைச் சேர்வைக்காரர்களும் ஒரு வேண்டுகோளை"[1] வெளியிட்டனர்.

யார் இந்த அறிவிப்பைப் பார்த்தாலும் அக்கரையுடன் படியுங்கள்

அனைத்து சமூகத்தினருக்கும் - பிராமணர்களாக இருந்தாலும் - சரி, அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லிம்களாக இருந்தாலும் சரி - நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.

  1. 41 Revenue Sundries, vol. 26, (16-6-1801). p.p. 441-70.