பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

“மாட்சிமை மிக்க நவாப் முகமது அலிகான் முட்டாள் தனமாகப் பரங்கிகளுக்கு இடங்கொடுத்துவிட்டு மூளி போலாகிவிட்டார். பரங்கிகளும் தாங்கள் செலுத்திவந்த விசுவாசத்திற்கு மாற்றமாக, மோசடியாக இந்த நாட்டு அரசைத் தங்களதாக்கிக் கொண்டனர். இங்குள்ள மக்களை நாயினுங் கேடாக மதித்து, தங்களது அதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனர். உங்களிடையே ஒற்றுமை இல்லை. நேயமனப்பான்மை இல்லை. பரங்கிகளது அந்தரங்கத்தை அறியாத நீங்கள், உங்களுக்குள் ஒத்துப்போகாமல், இந்த நாட்டை அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டீர்கள். அவர்கள் அதிகாரம் செலுத்தும் சீமைகளில் குடிமக்கள் ஆண்டிகளாகி விட்டனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, வெல்லம் போல அருமையாகிவிட்டது. இந்த அவல நிலையை நேரடியாக அனுபவித்தாலும், இதனைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் நம்மிடம் இல்லை.

“மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒருநாள் மரணமடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும்வரை நிலைத்து நிற்பது நிச்சயம்.

“ஆதலால், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களது பாரம்பரிய உரிமைகளை அனுபவித்தல் வேண்டும். குறிப்பாக ஆர்க்காட்டு ஸூபாவை மாட்சிமை தங்கிய நவாப்பும், கர்நாடகத்தை வேதய்யா, ராமண்ணாவும், வடுகநாத நாயக்கர் மைந்தன் திருமலைநாயக்கரும், தஞ்சாவூராரும் தங்களுக்குரிய தன்னாட்சியை, நமது நாட்டுக்கே உரிய மரபுகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் உடனே பெறுதல் வேண்டும். அப்பொழுது தான் எல்லா ஏழை எளியவர்களும் நிம்மதி அடைவார்கள்.

"ஆனால் உங்களில் யாராவது தாழ்ந்த பிறவிகளான நாய்களைப் போன்றவர்கள், பரங்கிகளது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து வந்தால் அவர்களது ... ... ... ... வெட்டப்படும். இத்தகைய இழிகுலத்தவர், பரங்கிகளுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப்படுத்தியுள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.