பக்கம்:மின்னல் பூ.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணில்லாமலே

பட்டின வீதியில் பதறியே நிற்கிறாள் -
மட்டிலாச் செல்வம் வலம்வரும் சந்தியில்
தூசெனக் காசினை வீசியே நவநவப்
பாசியும் சுண்ணமும் பகட்டும் வாங்குவோர்
சேர்ந்திடும் சூழலில் சென்னையின் வளமெலாம்
ஊர்ந்திடும் வீதியில் ஒருகண் இல்லையோ?
மெச்சிடும் பண்பெலாம் வெறும் வெளிப் பூச்சோ?
பச்சையும் பரிவும் பறந்ததோ வறண்டதோ?
வண்மையும் மாய்ந்த தென்னினும் இந்தப்
பெண்மையாம் குலத்தின் பெருமையைக் காக்கவும்
எண்ணமும் இல்லையோ? இந்தநா டென்றும்
அன்னையாம் சக்தியை அடி தொழு தேத்தும்
பெருமையே உடைத்தெனும் பேச்சும் ஒழிந்ததோ?
இருதயம் இல்லாப் பட்டினம் இதுவோ?
இங்குளோ ரெலாம் நினைத்திடில் இமைப்பினில்
அங்கை ஏந்துவோர் ஆருமே இலாமல்
செய்யவும் ஆகுமே; சென்னையின் சீர்த்தியும்
மெய்மையாய் விளங்கிடும்; கவிஞனும் வாழ்த்துமே.

சென்னை மாநகரிலே செல்வம் விளையாடும் ஒரு நாற்சந்தி, - திரைப்படக் கொட்டகைகள் சூழ்ந்தது. காசு தூசாக மதிக்கப்படும் இடம். அங்கே கண்ட காட்சி இது. மேலே சொல்ல வேண்டுவதில்லை; கவிதையே கூறும்.

கவிஞனும் வாழ்த்துமே என்று எழுதிவிட்டேன்; கவிஞன் என்னைப் பாடாதொழிக என்று கூறுவோர் இன்று இருக்கிறார்களா? இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/22&oldid=1110401" இலிருந்து மீள்விக்கப்பட்டது