பக்கம்:மின்னல் பூ.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதல் நெருப்பு


காதலியென் கண்முன்னே நிற்கின்றாள் காண்கிலிரோ?
கண்டவர்போல் நீவிரெல்லாம் காணவில்லை; கண்டிருந்தால்

வேதனையின் சளசளப்பாம் வீண்வம்பு பேசுவிரோ?
மேனியெலாம் கண்ணாக வாய் திறந்து நில்லீரோ?

தென்னம் புதுப்பாளை மடலவிழ்ந்து நிற்பது போல்
தேனிலவின் சாற்றினிலே வடித்தெடுத்த பொன்னுருவம்

சின்னஞ் சிறிய நகை உள்ளமதைக் கிள்ளு நகை
தெய்வரம்பை ஊஞ்சலிடும் வானவில்லைப்போல வந்து

வண்னக் கிளிப்பச்சை வளர்காஞ்சிப் பட்டுடுத்தி
மகரயாழ் சுரந்தூற்றும் இசைவடிவாய் என்றனிரு

கண்ணிமையில் நிற்கின்றாள்; காணீரோ, காணீரோ?
கவிதை வெறியூட்டுகிறாள்; கண்மாயம் செய்கின்றாள்!

பஞ்சுகொண்டு தீயணைக்கும் பயித்தியத்தின் செய்கையைப்போல்
பதமலரின் திறங்காட்டி, பரதத்தின் உயிர் காட்டி

நெஞ்சமதில் ஆடுகின்றாள்; நிமிர்ந்தோங்கு காதலெனும்
நெருப்புக் கடல் எழுந்த அமுதத்தைப் பெறுவேனோ?

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/30&oldid=1112608" இலிருந்து மீள்விக்கப்பட்டது