பக்கம்:மின்னல் பூ.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புத்தபோதனை


அரசையும் உலகத் தனைத்தையும் துறந்து
அரசடி யமர்ந்தே அகக்கண் திறந்தவன்
திருமுகம் சுடர் தர ஜேதவ னந்தனில்
இருள் புதை யாமத் தருந்தவத் திருந்தான்;-
அசைவிலா மௌனத் தமைதிஆண் டிருக்கப்
பசும்புற் படரும் பனிபோல் மெல்லெனத்
தேவன் ஒருவன் திருமுன் தோன்றி,
“யாவரே புவிமிசை விழித்துத் துஞ்சுவார்?
உறங்கிடும் போதும் விழித்துளோர் உண்டோ ?
அறங்கெடப் புரிகுவர் அவனியில் யாவரே?
மறங்கெடச் செய்பவர் மானிலத் தெவரே?
அறைகுலாய்” என்ன, அக்கணம் பகரும்;
“விழிப்புட னிருந்தும் உறங்குவோர் ஐவர்;
விழிப்புடன் உறங்கிடும் வேளையும் இருப்பார்;
ஐவரே கொடியவர்; ஐவரே உலகினில்
மெய்நிலை பெறவும் மிக உழைத் திடுவார்”
என்றனன் ஐயன் இளநகை புரிந்தே;
நன்றெனத் தேவனும் விண்ணிடைச் சென்றனன்.
புத்தனும் மோனப் பெருந்தவம் புகுந்தான்;
சத்திய வாக்கினைச் சார்ந்தவர் உணர்ந்தார்-
ஐவர் உறங்கிட ஆத்மனும் விழிப்பான்;
ஐவர்கூத் தாடிடில் அறவினை உறங்கும்; -
ஐவரே உலகில் அநீதிகள் புரிவார்;
ஐவரை அடக்கி ஆண்டோர் உயர்வார்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/55&oldid=1117606" இலிருந்து மீள்விக்கப்பட்டது