பக்கம்:மின்னல் பூ.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்றும் நேற்றாய்


இன்றும் நேற்றாய் நாளையும் இன்றாய்
என்றும் ஒன்றாம் இதுவோ வாழ்க்கை ?
குறிஇலாப் பொறியெனச் செய்ததே செய்து
மறையுமென் நாளெலாம்; மாறாச் சிறையினேன்.
உறுபய னின்றி உடற்கென உழைத்துப்
பிறர்கைக் கூத்தனாய்க் குறிக்கோளின்றி
உழைத்துத் தேய்ந்தே உருக்குலை கருவிபோல்
புழையுடை வாழ்க்கையில் புழுதிபோ லலைந்து
அடிப்பணி புரிந்தே அலையிடைத் துரும்பாய்
அலைவதே யல்லால் பயன்பிரி துண்டோ ?
குறியுடை வாழ்வினைக் குறித்தே ஏங்கினேன்:-
மறைந்தழி திறனெலாம் வானுயர்ந் தோங்கியே
செயற்கரி தானதைச் செய்திடும்
உயர் பெரு வாய்ப்பும் உறுமோ எனக்கே?


இன்றும் நேற்றாய் நாளையும் இன்றாய்-நேற்றைய நடைமுறைப்படியே இன்றும் வாழ்க்கை நடக்கிறது. இன்றைய நடைமுறைதான் நாளைக்கும்; மாறுதலே இல்லை.

பொறி--எந்திரம்.

பிறர் கைக் கூத்தனாய் - பிறர் தம் விருப்பப்படி ஆட்டு விக்கும் நடிகன் போல.

புழையுடை வாழ்க்கை-உள்ளே துளைபட்டுப்போன வாழ்க்கை.

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/58&oldid=1117609" இலிருந்து மீள்விக்கப்பட்டது