பக்கம்:மின்னல் பூ.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விலங்கு நெறி

மரகதத்துச் சின்னவுடல் மணியரக்கு நீள்மூக்கு
சிறுவெள்ளை யடிவயிறோ செவ்வானங் காட்டிவர
ஓடையிலே நீண்ட கிளை ஒற்றைக்கொம் பமர்ந்ததுவே,
ஆடிமிகக் குதிப்பதுவும் அம்புதனைப் போல்பாய்ந்து
நீர்க்குள் சிறுமீனை நெடுமூக்கில் குத்தியதைப்
பார்க்கும் கணத்திற்குள் பசியாற்றிக் கொள்ளுவதும்
வண்ணக் குருவி செயல் மனத்தில் சுழன்றிடவே
எண்ணம் அதிற் சேர்த்தே இருந்தேன் சிலநேரம்.
அப்பொழுதங் கேநடந்த அதிசயமும் என் சொல்வேன்;
தப்பாமற் சிறுமீனைத் தான்பிடிக்கும் குருவிதனை
வல்லாறுப் பறவையொன்று மறைந்திருந்து கண்வைத்து
பொல்லா நொடிப் பொழுதில் போனதே பற்றியந்தோ !
என்னடா சட்டமிது இதுவோ இயற்கைநெறி?
சின்னப் புழுபூச்சி சிறுமீன் இரையாகும்;
சிறுமீனைத் தான் கொத்தச் செம்மூக்கு மணிப்பறவை
பறவையதைக் கொல்ல பாரு பாழ்வயிற்று வல்லூறு-
கொல்லுவதே தானிந்தக் குவலயத்தின் பெருவிதியோ ?
வல்லார் எளியாரை வாட்டிப் பிழைப்பதுதான்
எழுதா விதியாமோ?- ஏரிக்கண் புலியிங்கே
உழுதா உயிர் வாழும்? ஊணுக்குக் கொல்லாமல்

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/78&oldid=1121399" இலிருந்து மீள்விக்கப்பட்டது