பக்கம்:மிஸஸ். இராதா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இந்தியர்கள் மிகவும் மோசமானவர்கள்; அற்ப சுகத்திற்காக எதையும் செய்வார்கள்” என்று மனதுக்குள் எண்ணியவளைப்போல் அறையைவிட்டு வெளியேறி விட்டாள்.

மஞ்சுளா வாழ வேண்டியவள், வாழ நினைப்பவள்; இன்னும் சொல்வதானால் வாழத் துடிப்பவள். வெள்ளைக் கவுன் அணிந்த சிஸ்டர்களுக்கு மத்தியில் அவள் வண்ணப்புடவை அணிந்து வாழ்ந்தது— மல்லிகைத் தோட்டத்தில் ஒரேஒரு ரோஜாச்செடி பூத்திருப்பது போல் இருந்தது.

அழகு—ஒரு சில பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக வந்து விடுகிறது. வேறு சிலருக்கோ அவர்களது உயிர்களைக் குடிக்கும் கேணியாக அமைந்து விடுகிறது.

மதர், அறையை விட்டுப்போன பிறகு மஞ்சுளா பயத்தால் நடுங்கினாள். ஏனெனில் ஒரு நாளும் மதர் அப்படி நடந்து கொண்டதில்லை. மதர் வருத்தப்பட்டுக் கொண்டு போனர்களா, அல்லது கோபப்பட்டுக்கொண்டு போனர்களா என்று அவளுக்கு ஒரே குழப்பம்.

ஏன் அப்படி நினைத்துக் குழம்புகிறாள்? கோபப்பட்டால் ஏதாவது உதவி செய்வார்கள் மதர்; வருத்தப்பட்டால் அவர்கள் மனத்தில் தப்பான அபிப்பிராயம் வேரூன்றத் தொடங்கிவிடும் இப்படி நினைத்தாள்மஞ்சுளா, தத்துவங்களைத் தெரிந்துகொள்ள புத்தகங்களை விடச் சம்பவங்கள்தான் மனிதர்களுக்கு உதவுகின்றன.

பொழுது விடியப்போகிறது. மாதா கோயில் மணி 'டணார் டணார்’ என்று அடிக்கத் தொடங்கி விட்டது. மதரும், சிஸ்டர்களும் அவர்களது வேனில் கோஷாகுளம் புதுரரில் உள்ள மாதா கோயிலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். மஞ்சுளா மட்டும் தன்னந் தனிமையாய் குவார்ட்டர்சில் இருந்தாள்.

“மஞ்சு!”

“என்ன தேவு?”

இப்படித்தான் மஞ்சுளாவும் தோட்டக்காரத் தேவாசீர்வாதமும் பேசிக் கொள்வார்கள்.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/30&oldid=1549408" இலிருந்து மீள்விக்கப்பட்டது