பக்கம்:மிஸஸ். இராதா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எந்த அளவுக்குப் புகழ்ந்திருக்கிறாய்? அவளை நீ உன் சித்தியாக ஏற்றுக் கொள்ளக் கூடத் துடிக்க வில்லையா?”

"துடித்தது உண்மைதான். நேற்றுவரை கூட எனக்கு அந்த எண்ணம்தான். இனிமேல் எப்படி முடியும்? ஒரு மலரில் இரண்டு வண்டுகள் மொய்க்கலாம், ஆனால் ஒரு சிம்மாசனத்தில் இரண்டு அரசர்கள் இருக்க முடியாது.”

“கீதா, உன் இரக்கமெல்லாம் எங்கே போய் விட்டது? எல்லாம் நாடகம் தானா?”

"இரக்கம் வேறு, தியாகம் வேறு! ராதாவுக்கு எவ்வளவு வேண்டுமானலும் கொடுப்பேன். அவளுக்காக நான் என் வாழ்க்கையை இழக்கமாட்டேன். மகரந்தமில்லாத மலரை வண்டுகள் கூட மதிப்பதில்லை. அதைப்போல புருஷன் இல்லாத பெண்ணை பூ விற்பவள் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டாள்!"

“கீதா, இது தான் உன் முடிவா?"

“சகோதரியாக இருந்தாலும் அவளை சக்களத்தியாக ஏற்றுக் கொள்ள எந்தப் பெண்ணும் சம்மதிக்க மாட்டாள். நாளைக்கே அவள் இந்த எஸ்டேட்டை விட்டுப் போய்விட வேண்டும். அதுவும் எங்கப்பாவிற்கு விவரம் தெரியுமுன் போய் விடவேண்டும்.”

—இதற்குள் பொழுது விடிந்துவிட்டது. கனவு கண்டவளைப்போல் கீதா விழித்துப்பார்த்தாள். அவள்எதிரே காபியை வைத்துக்கொண்டு ராதா நின்றாள். கீதா, வேண்டா வெறுப்பாக முகத்தைச் சுளித்துக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள். ராதா ஒரு கணம் திகைத்து அடுத்த கணம் சமாளித்துக் கொண்டாள். நேற்று இரவு, ஜன்னல் வழியாக வந்து பார்த்து விட்டு ஓடியது கீதா தான் என்று ராதா புரிந்து கொண்டாள்.

"கீதா?

"எனக்குக் காபி வேண்டாம்!”

"காலையில் எழுந்ததும் காபி மீது என்ன கீதா கோபம்?”

"எல்லாம் எனக்குத் தெரியும்!”

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/75&oldid=1551113" இலிருந்து மீள்விக்கப்பட்டது