பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

97

தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'மணந்தால் நான் அவரைத்தான் மணப்பேன்; இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவுவேன்!’ என்று மகளாகப்பட்டவள் தான் கற்ற சினிமா வசனங்களிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அவருக்கு முன்னால் வீச, 'ஐயோ, அப்படியெல்லாம் செய்து விடாதேடி யம்மா!’ என்று அவள் தாயாராகப்பட்டவள் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடிப்பாளாயினள்.

பார்த்தார் தகப்பனார்; ‘பக்கத்து வீட்டு பருவ மச்சா’னையும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவ'த்தையும் எப்படிப் பிரிப்பதென்று யோசித்தார். அதற்கு முதற்படியாகப் 'படித்தது போதும், என் அருமை மகளே!' என்று தம் மகளைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தினார். நிறுத்தியபின் அவளுக்குப் ‘பால் கசக்கிறதா, படுக்கை நோகிறதா?’ என்று கவனித்தார்; 'இல்லை' என்று தெரிந்தது. அதே மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் அவளைப் பார்க்காத ஏக்கத்தால் ‘பாகாய் உருகுகிறானா, துரும்பாய் இளைக்கிறானா?' என்று பார்த்தார்; அவன் பலூனாய்ப் பருத்து வந்ததைக் கண்டு பரம திருப்தியடைந்தார். ஆனாலும், ‘அன்புள்ள அத்தான் ஆசைக்கோர் கடிதம்’ என்று இங்கிருந்தும், ‘உன்னைக் கண் தேடுதே! உன் எழில் காணவே, என் உளம் நாடுதே!' என்று அங்கிருந்தும் 'கடிதம் விடு தூது’ நடக்க, அந்தத் துதிலிருந்தும் தப்பவதற்காக அவர் தம் வீட்டை மாற்றினார். அப்போதும் அந்தத் தூது நிற்காமல் தபால் இலாகாவினர் கைக்குப் போய்ச் சேர, அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யாமல் பிள்ளையின் கடிதத்தைப் பெண்ணைப் பெற்றவர்களிடமும், பெண்ணின் கடிதத்தைப் பிள்ளையைப் பெற்றவர்களிடமும் கொடுக்க, உடனே பிள்ளையின் தகப்பனார் துடிப்பதற்கு மீசையில்லாத குறையைத் தம் குடுமியை அவிழ்த்துப் பட்டென்று ஒரு தட்டுத்தட்டி முடிவதில் தீர்த்துக்கொண்டு பெண்ணைப் பெற்றவரைத் தேடி வர, 'என்ன சங்கதி?’ என்று இவர் அவரை விசாரிக்க, ‘உம்முடைய பெண்ணை அடக்கி வையும்!

மி.வி.க -7