பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

பூட்டி விட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுக்க முயல, அதற்குள் அந்தப் பாவி கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு என்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டுப் போய் விட்டான், ஐயா!' என்று அவன் ‘கோ'வென்று கதற, ‘அழாதே தம்பி, அழாதே! வேறு ஏதாவது ஒரு சாவி இருந்தால் கொடு; நான் இந்த பூட்டைத் திறந்து உன்னை விடுவிக்கிறேன்!' என்று பரோபகாரி அவனைத் தேற்ற, அவன் மூக்கைச் சிந்திக் கொண்டே ஒரு சாவிக்குப் பதிலாக ஒரு கொத்துச் சாவியை எடுத்துப் பரோபகாரியிடம் கொடுக்க, அவற்றில் ஒன்றைக் கொண்டு பூட்டைத் திறந்துவிட்டு, ‘இந்தா தம்பி, பூட்டும் சாவியும். இனிமேல் நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதைச் செய்துகொள்!' என்று பரோபகாரி பூட்டையும் சாவியையும் அவனிடம் கொடுக்க, இனி நான் செய்யவேண்டியது இதுதான்!' என்று அவன் அந்தப் பரோபகாரியை உள்ளே தள்ளிப் பூட்டி விட்டுத் 'தப்பினோம்! பிழைத்தோம்!' எனத் தலை தெறிக்க ஓடுவானாயினன்.

‘இதென்ன வம்பு? இப்படியும் ஏமாற்றுவார் இந்த உலகத்தில் உண்டா?' என்று பரோபகாரி திகைக்க, அதுகாலை நாலைந்து போலீசாருடன் அங்கே வந்த ஒரு மூதாட்டி, 'இதோ இருக்கிறான் திருடன், இதோ இருக்கிறான் திருடன்!' என்று பரோபகாரியை அவர்களுக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டே தன்னிடமிருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க, பரோபகாரி ஒன்றும் புரியாமல் நடந்ததைச் சொல்ல, ‘கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டு கதையா விடுகிறாய், கதை? நட!' என்று போலீசார் பரோபகாரியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிக் கொண்டு போலீஸ் நிலையத்துக்குச் செல்ல, திருடனைச் சாமர்த்தியமாகப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் வாயாற, மனமாறப் பாராட்டி மகிழ்வாராயினர்.'