பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

மரத்தடியில் உட்கார்ந்து எதையும் சாப்பிடாதே! ஒன்று, வெட்ட வெளியில் உட்கார்ந்து சாப்பிடு; இல்லை யென்றால், மேலே கூரை வேய்ந்த ஏதாவது ஓர் இடத்தில் உட்கார்ந்து சாப்பிடு!' என்று சொல்லிவிட்டு நடக்க, ‘இந்தாருங்கள், எனக்கு மாங்கல்யப் பிச்சை அளித்ததற்காக இதையாவது வைத்துக் கொள்ளுங்கள்!' என்று மனைவியாகப்பட்டவள் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஐந்து ரூபா நோட்டொன்றை அவிழ்த்து எடுத்து அவரிடம் நீட்ட, 'இந்த மருந்து கடவுள் கொடுத்த மருந்து; இதை நான் யாருக்கும் காசுக்கு விற்பதில்லை!' என்று சாமியார் அதை வாங்கிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நடக்க, அவள் அவரையே கடவுளாக எண்ணி, அவர் சென்ற திக்கு நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவாளாயினள்.

தன்னையும் அறியாமல் தன் கண்களில் நீர் மல்க அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்த கணவனாகப்பட்டவன், மனைவி கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக அவளை மார்புறத் தழுவிக்கொண்டு, 'இன்றுதான் எனக்குப் புத்தி வந்தது, மாரி!' என்று நாத் தழுதழுக்கச் சொல்ல, ‘ஏன், என்ன நடந்தது?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘மனைவி கணவனின் உயிரை வாங்க வந்தவள் அல்ல, கொடுக்க வந்தவள் என்பதை நான் இன்றுதான் உணர்ந்தேன்!' என்று அவன் பின்னும் சொல்லி அவளை இறுகத்தழுவ, 'இத்தனை நாள் வரை?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘நீ எங்கே விஷம் கிஷம் வைத்து என் உயிரை வாங்கி விடுவாயோ என்றுதான் இத்தனை நாளும் நான் எதைச் சாப்பிட்டாலும் அதில் கொஞ்சம் நாய்க்கோ, பூனைக்கோ வைத்த பின் சாப்பிட்டு வந்தேன்!’ என்று அவன் அதுவரை சொல்லாத உண்மையை அவளிடம் மனம் விட்டுச் சொல்ல, அவள் 'ஓ’ வென்று சிரித்து, 'இப்படியும் ஓர் ஆண் பிள்ளை உண்டா?' என்று அவன் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுத் தட்ட, அவன் வெட்கித் தலை குனிவானாயினன்.'