பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

109


‘ஏன் அழுகிறாய்? சொல்லிவிட்டாவது அழேன்!' என்று அவன் பொறுமையிழந்து கத்த, 'உங்களை நம்பி மோசம் போனதற்கு அழுகிறேன்!' என்று அவள் சொல்ல, 'என்னை நம்பி மோசம் போனாயா! ஏன், எதற்கு?’ என்று அவன் ஒன்றும் புரியாமல் கேட்பானாயினன்.

‘ஒன்றும் தெரியாதவர் மாதிரி நடிக்காதீர்கள்!’ என்று அவள் பின்னும் அவன்மேல் எரிந்து விழ, 'உண்மையிலேயே ஒன்றும் தெரியாதடி!’ என்று அவன் கையைப் பிசைவானாயினன்.

‘சரி, பாஞ்சாலியைத் தெரியுமா, உங்களுக்கு?' என்றாள் அவள்; ‘தெரியும்’ என்றான் அவன்.

‘அவளுக்கு இரண்டு குழந்தைகள்கூட இருப்பது தெரியுமா, உங்களுக்கு?' என்றாள் அவள்; ‘தெரியும்’ என்றான் அவன்.

‘எல்லாம் தெரிந்துமா அவளையும் அவள் குழந்தைகளையும் அனாதைகளாக விட்டுவிட்டு என்னை நீங்கள் கலியாணம் செய்துகொண்டீர்கள்?’ என்று அவள் ஆத்திரத்துடன் கேட்க, 'யாரடி சொன்னது அப்படி?’ என்று அவனும் ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டே கையிலிருந்த சோற்றைத் தட்டில் உதறிவிட்டு எழுந்து நிற்க, ‘எல்லாம் அவள்தான் சொன்னாள்!' என்று அதற்குள் தன் கண்களிலிருந்து வழிய ஆரம்பித்துவிட்ட நீரைத் துடைத்துக் கொண்டே அவள் சொல்ல, இவன் 'கலகல' வென்று நகைத்துக்கொண்டே மறுபடியும் சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்து, ‘உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பைத்தியமடி, பைத்தியம்!' என்று பின்னும் சிரிப்பானாயினன்.

‘யாருக்குப் பைத்தியம்? எனக்கா, அவளுக்கா?' என்று அவள் அப்போதும் அவனை நம்பாமல் கேட்க, 'அவளுக்குத் தான்!' என்று அவன் அப்போதும் பொறுமையிழக்காமல் சொல்ல, 'இல்லை, எனக்குத்தான்; உங்களைக் கலியாணம்