பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'கனகாம்பரம், கனகாம்பரம்' என்ற கட்டழகி ஒருத்தி காட்டுப் பாக்கத்திலே இருந்தாள். பொழுது விடிந்ததும் அவள் அந்த ஊர் மாடுகளையெல்லாம் ஓட்டிக் கொண்டு காட்டுக்குப் போவாள். அவற்றை அங்கே மேய விட்டுவிட்டு, அவள் அடுப்புக்கு வேண்டிய விறகு, சுள்ளி ஆகியவற்றைச் சேகரிப்பதில் ஈடுபடுவாள். அதற்குள் பொழுது சாய்ந்து விடும்; சேகரித்த விறகுச் சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு, மாடுகளையும் மடக்கி ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்புவாள்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாட்களா? எத்தனையோ நாட்களாக அவள் போவதும் வருவதுமாயிருந்தாள். அப்படிப் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அவள் யாரையும் ஏறெடுத்துக்கூடப் பார்ப்பது கிடையாது; 'தான் உண்டு, தன் காரியம் உண்டு' என்று போவாள்; வருவாள். அப்படிப்பட்டவள் ஒரு நாள் மாடுகளை முன்னால் போக விட்டுவிட்டு, அடிக்கொரு தரம் நிற்பதும், நின்றபின் ஏதோ நினைப்பதும், நினைத்தபின் விழுந்து விழுந்து சிரிப்பதுமாகச் செல்ல, அதைக் கவனித்த ஒரு பெரியவர், 'இத்தனை நாளும் இல்லாமல் இன்று என்ன வந்துவிட்டது இந்தப் பெண்ணுக்கு? இவள் ஏன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறாள்? ‘சிரிப்பு வியாதி' என்று ஏதோ ஒரு புது வியாதி இப்போது இளம் பெண்களுக்கெல்லாம் வருகிறதாமே, அந்த வியாதி இவளுக்கும் வந்து விட்டதா, என்ன? அது கலியாணமாகாத பெண்களுக்கல்லவா வருவதாகச் சொல்கிறார்கள்? இவளுக்குத்தான் கலியாணமாகிவிட்டதே! ஏன் அந்த வியாதி வருகிறது? அப்படியே வந்தாலும் அதை வாலிபர்கள் குணப்படுத்தி விடுகிறார்களென்றும், எப்படிக் குணப்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் மர்மமாகவே இருக்கிறதென்றும் சொல்கிறார்களே, அந்த மர்மம் இவளுடைய கணவனுக்குத் தெரியாதா, என்ன?' என்று பலவாறாக நினைத்துக்கொண்டே, மெல்ல அவளை