பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கணவராகக் கடவீர்!" என்று ஆசீர்வதித்துச் சந்திரவர்ணர் தலையிலே கட்ட, அதுவரை அங்கே நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்த படாதிபதி ஒருவர், "நாம் எடுக்கப் போகும் ‘கவி ரத்ன காளிதாஸ் படத்தில் கதாநாயகனாக நடிக்க இப்படி ஒரு புத்திசாலியல்லவா வேண்டும், நுனி மரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்ட?" என்று மெல்ல அவரை நெருங்கி, தம் எண்ணத்தைப் பக்குவமாக வெளியிட்டு, அதற்கு மேல் செய்ய வேண்டிய ஆயத்தங்களையெல்லாம் செய்து, அவரைக் காளிதாசனாக நடிக்கவிட, அவருடன் காளியாக நடித்த சாமுத்திரிகா லட்சணியாக்கப்பட்டவள் அவரைக் ‘காதல் பட்சணம்' செய்யக் கருதி, அந்தப் பட்சனத்துக்கு அவர் முற்றிலும் தகுதியுடையவர்தானா எனச் சோதிக்க எண்ணி, ஒரு நாள் இருவரும் தனிமையில் கள்ளத்தனமாகக் கள்ள மது அருந்திக் கொண்டிருந்த காலையில், "ஓய், சந்திரவர்ணரே உமக்கு இப்போது என்ன வயது?" என்று தன் கேள்விக் கனைகளில் முதல் கணையான வயதுக் கணையைத் தொடுக்க, "முப்பது!" என அவர் பதில் இறுக்க, அவள் 'கக்கக்கக்கக்கா' என ஒரு ‘காக்காய்ச் சிரிப்பு'ச் சிரிக்கலாயினள்.

அதைக் கண்டு சந்திரவர்ணராகப்பட்டவர் விழித்து, "ஏன் சிரிக்கிறாய் பெண்ணே, என் கண்ணே!" எனக் கடாவ, "நான் சினிமா வயதைக் கேட்கவில்லை; நிஜ வயதைக் கேட்கிறேன்!" என அவள் விளக்குவாளாயினள்.

அதற்கு மேல் அவர் அக்கம் பக்கம் பார்த்து, "வெளியே சொல்ல வேண்டாம்; ஐம்பதைத் தாண்டிவிட்டது!" என்று அவள் காதோடு காதாகச் சொல்ல, "க்கும்! காதில் வாயை வைப்பதுபோல் கன்னத்தில் வாயை வைத்துவிட்டீரே!" என்று அவள் சிணுங்கி, தன் கன்னத்தில் அவர் வைத்த ‘முத்திரையைப் பவுடர் கலையாமல் ஒத்தி எடுத்துவிட்டு, “ஆமாம், உமக்குக் கலியாணமாகிவிட்டதா?" என ஒய்யார-