பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பணம் பாசத்தை வெல்கிறதா, பாசம் பணத்தை வெல்கிறதா?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'பாசம் எங்கே பணத்தை வெல்கிறது? பணம்தான் பாசத்தை வெல்கிறது!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக் கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு....

24

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

பாப விமோசனம் தேடிய பக்தர் கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்தி நான்காவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! தற்போது நான் வாசம் செய்து வரும் முருங்கை மரத்துக்குக் கீழே பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் கோயிலுக்குத் தினந்தோறும் ஒரு பக்தர் வருவதுண்டு. அவர் காலையில் அலுவலகத்துக்குப் போகும் போதும் சரி, மாலையில் வீடு திரும்பும்போதும் சரி, அங்குள்ள பிள்ளையாரை முறைப்படி மும்முறை வணங்காமல் செல்ல மாட்டார். அங்ஙனம் வணங்கும்போது, காலையில் மூன்று குட்டுக்கள், மூன்று தோப்புக் கரணங்களுடன் தம்முடைய பிரார்த்தனையை முடித்துக் கொள்ளும் அவர், மாலையில் அவ்வாறு முடித்துக் கொள்ளமாட்டார். ஒரு நாள் மாலை அவருடைய குட்டுக்களும் தோப்புக்கரணங்களும் நாலு, ஐந்து, ஆறு, ஏழு என்று கூடிக்கொண்டே போகும்; இன்னொரு நாள் மாலை அந்த ஏழைக்கூட எட்டிப் பிடிக்காமல் ஆறு, ஐந்து, நாலு என்று