பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

எப்படியும் அவரைப் பெரிய மனிதராக்கிவிட்டே மறு வேலை பார்ப்பது என்ற தீர்மானத்துடன், அன்பளிப்புப் பிரதி ஒன்றோடு ஆத்ம திருப்தியடையும் சிலரை அணுகி, ‘திருப்பதி திருஞானம்' குறித்துத் தலைக்கு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதித் தருமாறு வழக்கம்போல் சிரித்துக் கொண்டே கேட்டேன். கைமேல் பலன் கிடைத்தது; அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டு, அதற்கென்று ஒரு விழாவே நடத்தினேன். அதனால் அவருடைய புகழும் பல்கிப் பெருகிற்று; என்னுடைய ‘பாங்க் பாலன்ஸ்'ஸும் ஏதோ கொஞ்சம் பல்கிப் பெருகிற்று. அந்த முறையைப் பின்பற்றி......'

சர்வகட்சி சாராநாதன் மேலே சொல்லி முடிப்பதற்குள் 'அடேடே, குட்டையன் செட்டியாரா? வாங்க, வாங்க!’ என்று முகமன் கூறி அவரை வரவேற்றுக்கொண்டே பாதாளம் உள்ளே வர, 'அட, நீ வேறே இங்கே இருக்கிறாயா? அது தெரியாமல் போச்சே எனக்கு!' என்று பூர்வாசிரமத்தில் குட்டையன் செட்டியாராக இருந்த சர்வகட்சி சாரநாதன் இடியுண்ட நாகம்போல் மிரள, 'வட்டி, கிட்டி என்று சொல்லும்போதே நான் நினைத்தேன். நீர் செட்டியாராய்த் தான் இருக்க வேண்டுமென்று. அது சரியாய்ப் போய் விட்டது!’ என்ற விக்கிரமாதித்தர், ‘ஏண்டா, பாதாளம்! இவரை உனக்கு ஏற்கெனவே தெரியுமா?' என்று கேட்க, ‘என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்களே? இவரால் தானே நான் சொந்தமாக டாக்ஸி வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன்?’ என்று அவன் சொல்ல, 'ஓஹோ! இவர்தான் உனக்கு முதன் முதலாகத் தம் பணத்தைப் போட்டுச் சொந்த டாக்ஸி வாங்கிக் கொடுத்தாரா?’ என்று விக்கிரமாதித்தர் கடாவ, ‘நல்லாச் சொன்னீர்களே, இவரா கொடுப்பார்? யாராவது கொடுக்க வந்தால்கூட அதைச் சுக்கிராச்சாரியார்போல் இவர் குறுக்கே வந்து தடுப்பாரே? கதையைக் கொஞ்சம் கேளுங்கள்' என்று பாதாளம் சொன்னதாவது: