பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இப்படியாக, அந்த எழுத்தாளருக்கோ ஒரே ஒரு பெண்; இந்தப் புண்ணியவானால் அவள் இப்போது அனாதையாகி, ஒளவை ஆசிரமத்தில் இருக்கிறாள். இவரோ அவளுடைய தகப்பனார் எலும் பொடிய மொழி பெயர்த்துக் கொடுத்த பத்துப் புத்தகங்களையும் இதுவரை பத்துப் பதிப்புக்களுக்கு மேல் வெளியிட்டுப் பணம் பண்ணியிருக்கிறார்; இனி மேலும் பண்ணுவார் - அதுதான் ஏழேழு நாற்பத்தொன்பது தலை முறைகளுக்கும் சேர்த்து, அன்றே இவர் அவரிடம் எழுதி வாங்கிவிட்டாரே! இதுதான் அந்தப் பரிதாபத்துக்குரிய எழுத்தாளரின் பத்துப் புத்தகங்களின் கதை!’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘சரிதான்; இவருடைய இன்ப சாகரம் எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரே துன்பசாகரமாயிருக்கும் போலிருக்கிறது!' என்று சொல்லிக்கொண்டே விக்கிரமாதித்தர் திரும்ப, 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; அந்தப் பெண்ணை ஒளவை ஆசிரமத்தில் சேர்ந்தவன்கூட நான்தான்!' என்று சர்வகட்சி சாரநாதன் சர்வ பவ்யத்துடன் சொல்ல, அதுதான் சமயமென்று, 'அப்படியா சமாசாரம்? இப்போது என்ன சொல்கிறீர்? அந்தப் பெண்ணுக்காவது உம்முடைய செலவில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைக்கிறீரா, இல்லையா? இல்லையென்றால் சொல்லும்; ஓர் எழுத்தாளரின் திடீர் மரணத்துக்குக் காரணமான உம்மை நான் இப்போதே போலீசாரிடம் ஒப்படைத்துவிடுகிறேன்!' என்று விக்கிரமாதித்தர் மிரட்ட, 'ஐயோ, வேண்டாம்! அப்படியே பண்ணி வைக்கிறேன்! என்று அவர் அலற, 'சரி, இலக்கியத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தப்படுத்தி வைக்கப் போகிறேன் என்றீரே, அது என்ன சம்பந்தம்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'தன்னலக் கழகத் தலைவருக்குப் பெருமையையும் புகழையும் தேடி வைத்ததுபோல் உங்களுக்கும் தேடி வைக்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அதற்காக உங்கள் பேரால் பலரை