பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

என்றான் குப்பன். ‘கவலைப்படாதே, அப்பா! நான் பட்டணத்க்குப் போய் அதற்கு வேண்டிய பணத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்!' என்றான் சப்பாணி. ‘செய் மகனே, செய். எனக்கோ வயதாகிவிட்டது. இனி நீதானே இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்?’ என்றான் குப்பன். பையன் அன்றே பட்டணத்துக்குப் புறப்பட்டான்.

அவன் போன நாளிலிருந்தே அவனைப் பணத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குப்பன், ஒரு நாள் வழக்கம் போல் அவனை எதிர்பார்த்துத் திண்ணைக்கு வந்து உட்கார, கையில் அன்றைய தினசரிப் பத்திரிகையோடு வந்த அந்த ஊர் கர்ணம் அவனை நோக்கிப் பரபரப்புடன் வந்து, ‘ஏண்டா, குப்பா! உனக்குச் சங்கதி தெரியுமா?’ என்று கேட்க, ‘என்ன சங்கதி?’ என்று அவன் அவரைத் திருப்பிக் கேட்க, அவர் தம் கையில் இருந்த பத்திரிகையைத் துக்கிப் பிடித்து, ‘பட்டினிச் சாவு! பரிதாபம்! அந்தோ, பரிதாபம்! ஏப்ரல் 1-இன்று காலை இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத் தகுந்த வாலிபன் ஒருவன், 'பசி! ஐயோ, பசி!' என்று அடி வயிற்றில் அடித்துக்கொண்டே சென்னை தங்கசாலை தெரு வழியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்துகொண்டிருந்தார். அவர், "ஸ், சத்தம் போட்டுச் சொல்லாதே! ரகசியமாகவாவது சொல்லித் தொலை!" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் மயங்கி கீழே விழுந்தான். அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை. அவனுடைய சட்டைப் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதத்திலிருந்து அவன் பசியெடுத்தான் பட்டியைச் சேர்ந்தவனென்றும், பெயர் சப்பாணி என்றும் பிழைப்பதற்காகப் பட்டணத்துக்கு வந்தவனென்றும், அவனுடைய தகப்பனார் பெயர் குப்பனென்றும் தெரிகிறது’ என்று படிக்க, அதைக் கேட்ட குப்பன், 'ஐயோ, மகனே!

மி.வி.க -16