பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



322

கறுப்பு வேட்டியும் இந்த நாய்க்குப் பிடிக்கவில்லை; அதனால்தான் இது உங்களைக் கண்டதும் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா? நான்தான் கறுப்பாடை அணிந்திருக்கிறேன்; அம்மா கறுப்பாடை எதுவும் அணியவில்லையே? அவர்களைப் பார்த்து இந்த நாய் ஏன் குரைக்கிறது?’ என்று நாயர் கேட்க, ‘அவர்கள் கறுப்பாடை அணியாவிட்டாலும், கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தும் இந்த நாய் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அப்படியா?' என்று நவஸ்ரீ உடனே தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிக் காரில் எறிந்துவிட்டு ‘டார்லிங்!' என்று தன் அருமை நாயை அழைக்க, அது குரைப்பதை நிறுத்தி வாலைக் 'குழை, குழை' என்று குழைத்துக்கொண்டே சென்று அவளை ஓர் உரசு உரசிக் கொண்டு நிற்க, 'ஏ, நாயர்! இனி நீ உன் விரதம் முடியும்வரை இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதே!' என்று சொல்லிப் பரமசிவன் நாயரை அனுப்பி விட்டுத் தன்னுடைய டார்லிங்கைத் தூக்கி ஆசை தீர முத்தமிட்டுக்கொண்டே காரில் ஏறி, 'நன்றி’ என்று சொல்லி மிஸ்டர் விக்கிரமாதித்தரிடம் விடை பெறுவாளாயினள்."

முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான முல்லை இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க........