பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

69

பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டிருக்கும் அவர், ரொம்ப நாட்களாக என்னையாவது கலியாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். அவரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். அவர் வந்து பெண்ணைப் பார்த்து, ‘சரி' என்று சொல்லிவிட்டால் எனக்கும் சரியே!' என்றேன். ‘சரி' என்று அவர் போய் விட்டார். அவருடைய விலாசத்தை நான் உனக்குத் தருகிறேன். அந்த விலாசத்துக்குப் போய், நீ எனக்காக ஒரே ஒரு நாள் என்னுடைய அண்ணனாக நடித்தால் போதும்!' என்று கலியாணராமன் சொல்ல, 'இதற்காக நீ இவ்வளவு தூரம் என்னிடம் சொல்ல வேண்டுமா? இதைக்கூடச் செய்யவில்லையென்றால் நான்தான் உனக்கு எப்படி நண்பனாவேன், நீ தான் எனக்கு எப்படி நண்பனாவாய்? கொடு முகவரியை, இப்பொழுதே புறப்படுகிறேன்!' என்று மணவழகன் துடிப்பானாயினன்.

‘பெண்ணைப் பிடித்துவிட்டால் முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க என்னைக் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வராதே! நீயே அவர்களுடன் கலந்து பேசி, ஏதாவது ஒரு நாளைக் குறித்துக்கொண்டு வந்துவிடு. அந்த நாளில் அவளுக்குத் தாலி கட்ட நான் தயாராகிவிடுகிறேன்' என்று கலியாணராமன் சொல்லி, ஆனந்தமூர்த்தியின் விலாசத்தை எடுத்து ஆனந்தமாகக் கொடுக்க, 'தாலியைக் கட்டிவிட்டுப் பணத்தைக் கேட்காதேடா, புத்திசாலி! பணத்தை வாங்கிக் கொண்டு தாலியைக் கட்டு!' என மணவழகன் அவனை எச்சரித்துவிட்டு, உடனே கோவைக்குப் புறப்பட்டு போவானாயினன்.

அங்கே ஆனந்தமூர்த்தியின் முகவரியைத் தேடி மணவழகன் அலைய, 'அவர் கண்ணை மூடிக் காரியம்கூட நடந்து விட்டதே!' என்ற அங்கிருந்தவர்கள் சொல்ல, ‘அப்படியா சமாசாரம்?’ என்று ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற அவன், மறுகணம் ஒரு துள்ளுத் துள்ளி, ஒரு குதி குதித்து