பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

73


இன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் துரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு மாடுகளைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த மாடுகளைப் பார்த்தீர்களா?’ என்று மனைவியாகப்பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?' என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.

‘பசு முன்னால் செல்ல, காளை அதைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கவில்லையா?' என அவள் பின்னும் கேட்க, பொறுமை இழந்த கணவனாகப்பட்டவன், ‘அதற்காக என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்?' என அவள்மேல் எரிந்து விழுவானாயினன்.

‘ஈ, எறும்பு முதல் எண்ணாயிரம் ஜீவராசிகளும் எங்கே போனாலும் பெண் முன்னாலும், ஆண் அதற்குப் பின்னாலும் போய்க்கொண்டிருக்க, நாம் மட்டும் அதற்கு விரோதமாக ஏன் போக வேண்டுமாம்?’ என மனைவியாகப் பட்டவள் சிணுங்க, கணவனாகப்பட்டவன், 'சரி, நீ வேண்டுமானால் முன்னால் போ; உனக்குப் பின்னால் நான் வந்து தொலைக்கிறேன்!' என்று அவளை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவளுக்குப் பின்னால் அவன் நடப்பானாயினன்.

அதுகாலை அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்த அவனுடைய முன்னாள் காதலி ஒருத்தி அவனைப் பார்த்து 'இளி, இளி' என்று இளிக்க, அவனும் அவளைப் பார்த்து 'இளி, இளி' என்று இளித்தபடி, அவளோடு கொஞ்சம் நெருங்கி நின்று ஏதோ பேசுவானாயினன்.

வெற்றிப் பெருமிதத்துடன் அவனுக்கு முன்னால் வீசி நடை போட்டுக் கொண்டிருந்த அவன் மனைவியாகப் பட்டவள் சிறிது தூரம் சென்றதும் தனக்குப் பின்னால் தன் கணவன் வராததைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவன் யாரோ ஒருத்தியுடன் இளித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்று, 'இதற்குத் தான் இந்த