பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

95

'எங்கே, எப்பொழுது யார் கிடைப்பார்கள்?' என்று வேறுவேலை ஒன்றும் இல்லாமல் காத்துக் கொண்டிருந்த காதலாகப்பட்டது, அன்றே அவர்களுக்கிடையில் தோன்றி, ஊன்றி, முளை விட்டு, இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, பழுக்கும் வரை ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர், திடீரென்று ஒருநாள் விழித்துக்கொண்டு, ‘அப்படியா சமாசாரம்? ஆச்சா, போச்சா?’ என்று அங்கொரு காலும், இங்கொரு காலும் எடுத்து வைத்துக் 'குதி, குதி' என்று குதிக்க, ‘சும்மா நிறுத்துங்கள்!' என்பதாகத்தானே முச்சந்தியில் கை காட்டி வண்டிகளை நிறுத்தும் போலீஸ்காரன்போல் அவள் தன் பெற்றோரை அலட்சியமாகக் கை காட்டி நிறுத்துவாளாயினள்.

‘பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேற்று நீ அந்தப் பயலோடு எங்கேயடி, போனாய்?' என்பதாகத்தானே தாயாகப்பட்டவள் சீற, 'நான் ஒன்றும் அந்தப் பயலோடு போகவில்லை; வாத்தியாரம்மாவோடு ‘எக்ஸ்கர்ஷன்'தான் போயிருந்தேன்!' என்பதாகத்தானே மகளாகப்பட்டவள் 'காதல் பொய்'களில் ஒன்றைச் சொல்லி, அவள் வாயை அடக்குவாளாயினள்.

‘இப்படிப் போய்ப் போய்த்தான் அவள் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருஷங்கள் உட்கார்ந்திருக்கிறாள் போல் இருக்கிறது!' என்பதாகத்தானே தகப்பனாராகப் பட்டவர் திருவாய் மலர, 'நானா உட்கார்ந்திருக்கிறேன்? அவர்கள் உட்கார வைத்தால் அதற்கு நான் என்ன செய்வதாம்?’ என்பதாகத்தானே மகளாகப்பட்டவளும் தன் பவளவாய் திறந்து, பதவிசாகச் சொல்வாளாயினள்.

‘காலேஜுக்குப் போனால்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்பார்கள்: ஹைஸ்கூலிலேயே இப்படி நடக்கிறதே?' என்று தாயார் மூக்கின்மேல் விரலை வைக்க, ‘காலம் அப்படி இருக்குடி! எலிமெண்டரி ஸ்கூலிலேயே