பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கிறிஸ்மஸ் விடுமுறை வந்தது. அவர் உத்தியோக நிமித்தமாக பத்ராவதி போக நேர்ந்தது. அந்த அம்மணியும் உடன் சென்றார். என்னையும் வருமாறு அழைத்தனர். பத்ராவதியில் சிலநாள் தங்கியபின் சிருங்கேரி சென்று திரும்ப முடிவு செய்தனர்.

பத்ராவதியிலிருந்து ஷிமோகா சென்றோம். சிவமொக்கா என்று மருவி வழங்கப்படும் ஷிமோகா மலை நாட்டிலே பிற்போக்கானதொரு பழைய நகரம். அங்கிருந்து கொப்பா வழியாகச் சிருங்கேரி சென்றோம். கொப்பா என்பது தாலுக்காவின் தலைநகர். இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கிறேன். விதி எவ்வளவு வேகமாக என்னே அங்கே உந்தித் தள்ளியிருக்கிறது! வருஷத்தின் முடிவிலே மாரிக் காலத்தின் இறுதியிலே ஒரு நாள் மாலை சிருங்கேரிக்குக் கொண்டு சேர்த்தது.

பழைய தர்மசாலையிலே ஓரிரண்டு அறைகள் எங்கள் உபயோகத்துக்குக் கொடுக்கப்பட்டன. அதிலே நீண்ட நேரம் தங்கியிருக்கவில்லை. மடத்துக் கட்டிடங்களையும் துங்கை ஆற்றையும் சுற்றிப் பார்க்கலாம் என்று வெளியே புறப்பட்டோம். ஆற்றின்மீது அழகிய காட்சி தந்தது மரப்பாலம். அந்தி மாலையின் அழகிய பின்னணியிலே உள்ளம் கொள்ளை கொண்டது. சூரியன் மேற்குப்புறமாக மலைவாயிலில் இறங்கிக் கொண்டிருந்தான். துங்கா நதியின் மெல்லிய இசையினூடே மெல்லென வந்து கொண்டி ருந்தது மாலை. பாலத்தின் மீது ஏறினேன். கீழே நோக்கினேன். நீரிலே நீந்தி விளையாடிய மீன்களைப் பார்த்தேன். சுற்றிலும் காட்சி தந்த மலைகளின் விளிம்பு-