பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இதழ்களில் ஹைகூ «»,«» கவிதைகள் தமிழ் இதழ்களில் இடம் பெறுவதே அபூர்வம். முன்பெல்லாம் மரபுக்கவிதைகள் பொங்கல் மலரிலோ தீபாவளி மலரிலோ இடம்பெறும். பின்பு தமிழ் உணர்வு பெருகப் பெருக வாரந்தோறும் வரத்தொடங்கின. புதுக்கவிதை தோற்றம் பெற்ற காலத்தில் பெரிய இதழ்கள், பெரிய பதிப்பகங்கள் புதுக்கவிதைப் பக்கமே தலைவைத்துப் படுக்கத் தயங்கின. சிற்றிதழ்களே அவற்றைப் பெரிய அளவில் தாங்கி வெளிவந்தன. சிறுபதிப்ப கங்களே நூலாகக் கொண்டு வந்தன. புதுக்கவிதைக்காகவே வெளிவந்த சிற்றிதழ்களும் உண்டு. புதுக்கவிதையின் அடுத்த கட்டமாக, ஒருபடி முன்னேற்றமாக ஹைகூக்களும் இதழ்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. புதுக்கவிதை ஏற்கெனவே பெரிய இதழ்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டதால் ஹைகூவை வெளியிட அவை தயங்கவில்லை. நமது இலக்கிய வகைகளில் சிறுகதையையும் நாவலையும் மேலைத் திசையிலிருந்து பெற்றோம். நாம் கீழ்த்திசையிலிருந்து எதையும் பெறவில்லை. ஹைகூ தான் முதன் முதலாக ஒரு கீழை நாட்டிலிருந்து நாம் பெறும் இலக்கிய வகையாகும். ஹைகூ ஜப்பானில் பிறப்பெடுத்திருந்தாலும் அதன் வேர் அதற்கு மேற்கில் உள்ள சீனத்தில் ஊன்றியிருந்தது. காரணம் ஹைகூவை இயற்றிய ஜப்பானியப் பெருங்கவிஞர்கள் பெளத்தத்தோடு தொடர்பு உடையவர்கள்; முக்கியமாக ஜென் பெளத்தத்தோடு தொடர்புடையவர்கள் -